பிரதமருக்கு கருப்பு கொடி காட்ட நினைக்கும் வைகோவை, தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
பிரதமருக்கு கருப்பு கொடி காட்ட நினைக்கும் வைகோவை தமிழக மக்கள் மன்னிக்கமாட்டார்கள் என மதுரையில் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
மதுரை,
மதுரை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஜல்லிக்கட்டு போட்டியை எல்லா இடங்களிலும் நடத்துவதற்கு அரசு ஊக்கப்படுத்துவது ஆரோக்கியமானது. தமிழர்களின் பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக தான் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு இருந்தும் தமிழர்களின் ஒட்டுமொத்த கோரிக்கைக்கு மத்திய அரசு மதிப்புக் கொடுத்து, தமிழக அரசு அதற்கான அவசர ஆணை பிறப்பிப்பதற்கு முழு ஒத்துழைப்பு அளித்தது.
தமிழர்களின் உணர்வு பாதுகாக்கப்பட வேண்டும், அதே நேரத்தில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது. எனவே அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அதிக கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும். கொடநாடு விவகாரத்தில் யார் குற்றவாளி என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அடிப்படை ஆதாரம் இல்லாமல் ஒருவர் மீது குற்றம் சாட்டக்கூடாது.
என்னை பொருத்தவரை தமிழகத்திலும் சரி, மத்தியிலும் சரி பா.ஜ.க. மிகப்பெரிய கூட்டணியை முன்னெடுத்துச் செல்லும். இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணியாக மாறும். 3 மாநிலங்களில் காங்கிரஸ் பெற்றது வெற்றி தான். ஆனால் அந்த 3 மாநிலங்களில் பா.ஜ.க. பெற்றது தோல்வி அல்ல. பிரதமர் வேட்பாளராக இருப்பதற்கு ராகுல்காந்திக்கு தகுதி இல்லை.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது. இதற்காக வருகிற 27–ந்தேதி பிரதமர் மோடி மதுரை வருகிறார். இந்தநிலையில், மதுரைக்கு வரும் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுவேன் என்று வைகோ கூறுவது சரியல்ல. வைகோவை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். கருப்புக் கொடியும் செல்லாது, அவரது கருப்பு சால்வையும் செல்லாது.
இவ்வாறு அவர் கூறினார்.