பசுமை தொழிற்சாலைகள் தொடர்பாக நாராயணசாமி, அதிகாரிகளுடன் ஆலோசனை
பசுமை தொழிற்சாலைகள் தொடர்பாக முதல்–அமைச்சர் நாராயணசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி,
புதுவையில் முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு பதவியேற்றதை தொடர்ந்து கடந்த 2016–ம் ஆண்டு புதிய தொழிற்கொள்கை அறிவிக்கப்பட்டது. இந்த தொழிற்கொள்கையின் அடிப்படையில் புதிய தொழிற்சாலைகளை தொடங்க பல தொழிலதிபர்கள் விண்ணப்பித்தனர்.
இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பசுமை தொழிற்சாலைகளை கொண்டு வருவது, தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான அனுமதிகளை எளிமையாக்குவது உள்ளிட்டவைகள் தொடர்பாக முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ஷாஜகான், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் மற்றும் அரசு செயலாளர்கள், இயக்குனர்கள் கலந்துகொண்டனர். வருகிற 29–ந்தேதி தொழிலதிபர்களுடன் புதிய தொழிற்சாலைகள் தொடங்குவது தொடர்பாக எந்த மாதிரியான விஷயங்களை விவாதிப்பது, பசுமை தொழிற்சாலைகளை தொடங்குவதற்கு அளிக்கப்பட வேண்டிய சலுகைகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.