“கோடநாடு கொலைகளின் பின்னணியில் இருப்பது எடப்பாடி பழனிசாமி தான்” மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு


“கோடநாடு கொலைகளின் பின்னணியில் இருப்பது எடப்பாடி பழனிசாமி தான்” மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 22 Jan 2019 11:15 PM GMT (Updated: 22 Jan 2019 7:09 PM GMT)

“கோடநாடு கொலைகளின் பின்னணியில் இருப்பது எடப்பாடி பழனிசாமி தான்” என்று ஊராட்சி சபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பாக பேசினார்.

கரூர்,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த ஈசநத்தம், சின்னதாராபுரம் ஆகிய இடங்களில் தி.மு.க. சார்பில் நேற்று ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டங்களில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அந்தந்த பகுதிகளை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் குடிநீர், பஸ்வசதி, மின் விளக்கு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்சினைகளை பற்றி பேசினார்கள்.

முடிவில் மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க. அரசு நடத்தி இருந்தால், இந்த ஊராட்சி சபை கூட்டத்தை நாங்கள் நடத்த வேண்டிய தேவை இருந்திருக்காது. இந்த கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட குறைகள் எல்லாமே உள்ளாட்சி அமைப்புகளால் தீர்த்து வைக்கப்பட கூடிய பிரச்சினைகள் தான்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் அ.தி.மு.க. தோற்று விடும் என்ற பயத்தின் காரணமாக நடத்தாமல், உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாததற்கு தி.மு.க. கோர்ட்டில் தடை வாங்கியது தான் காரணம் என்று ஒரு அபாண்டமான பொய்யை திரும்ப, திரும்ப சொல்லி வருகிறது.

ஆனால் உண்மை என்னவென்றால், நாங்கள் கோர்ட்டில் வழக்கு போட்டது தேர்தலை நிறுத்துவதற்காக அல்ல. பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை முறைப்படுத்தி நடத்த வேண்டும் என்று தான் கேட்டு இருந்தோம். நீதிமன்றமும் அதனை ஏற்றுக்கொண்டு இட ஒதுக்கீட்டை முறைப்படுத்தி தேர்தலை நடத்தும்படி தேதி நிர்ணயம் செய்து உத்தரவிட்டது. நிர்ணயிக்கப்பட்ட தேதியில் தேர்தலை நடத்தவில்லை என்பதற்காக நீதிமன்ற அவமதிப்பையும் சுட்டிக்காட்டி எச்சரிக்கை விடுத்தது. தி.மு.க. ஆட்சி அமைந்த மறுநொடியே உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்ற உறுதியை இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன்.

கருணாநிதி 5 முறை தமிழகத்தில் முதல்-அமைச்சராக இருந்து ஆட்சி செய்தார். தனது ஆட்சிக் காலத்தில் சொன்னதை எல்லாம் செய்தது மட்டும் இன்றி சொல்லாததையும் செய்தார். கருணாநிதியின் மகனான நானும் சொல்வதை செய்வேன் என்ற நம்பிக்கையை என்மீது வைத்து இருக்கிறீர்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தி.மு.க. ஆட்சி மலரும்.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது அவர் இட்லி சாப்பிட்டார், மோர் குடித்தார், டீ சாப்பிட்டார், டி.வி. பார்த்தார் என்று தான் அமைச்சர்கள் கூறினார்களே தவிர, அவருக்கு என்ன வியாதி என்று தலைமை செயலாளரோ அல்லது சம்பந்தப்பட்ட துறை அமைச்சரோ அறிவிக்கவில்லை. திடீரென ஒரு நாள் அவர் இறந்து விட்டதாக கூறினார்கள். அதனால் தான் அவரது மர்ம மரணம் பற்றி இப்போது ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்திக்கொண்டு இருக்கிறது. சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் இந்த விசாரணை போதாது சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என பேட்டி அளித்து இருக்கிறார்.

3 முறை தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு அவரால் பயன் அடைந்த, அவரது பெயரை சொல்லி ஆட்சி நடத்திக்கொண்டு இருப்பவர்களுக்கு அவருக்காக இதுவரை ஒரு இரங்கல் கூட்டம் நடத்தக்கூட துப்பு, திராணி இல்லை. அந்த அளவில் தான் இந்த ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் நடந்து வரும் அ.தி.மு.க. அரசு மைனாரிட்டி அரசு. மத்தியில் உள்ள மோடியின் தயவினால் நீடித்துக்கொண்டிருக்கிறது.

ஏற்கனவே 18 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி பறிக்கப்பட்டு விட்டது. கருணாநிதி மறைவினால் திருவாரூர் தொகுதியும், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மறைவினால் திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக இருக்கிறது. இப்போது அமைச்சர் ஒருவருக்கு 3 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டதால் அவரது பதவியும் பறிக்கப்பட்டு மொத்தம் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன.

இந்த 21 தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற தேர்தலோடு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது.

எனவே நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் மட்டும் நடத்தப்படுமா அல்லது ஒட்டுமொத்தமாக சட்டமன்றம் ஒழிக்கப்பட்டு சட்டமன்ற தேர்தலும் சேர்த்து நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது. தனது பதவிக்கு ஆபத்து வரப்போகிறது என்பதால்தான் ஓ.பன்னீர்செல்வம் தலைமை செயலகத்தில் யாகம் நடத்தி இருக்கிறார். அவர் தியானம் செய்வதிலும், ஆவியுடன் பேசுவதிலும் வல்லவர். ஏற்கனவே ஜெயலலிதா சமாதி முன் அமர்ந்து அவர் தியானம் செய்தார். ஜெயலலிதா ஆவியுடன் பேசினேன், என்றார்.

தலைமை செயலகத்தில் யாகம் நடத்தலாமா? என கேட்டதற்கு நான் யாகம் நடத்தவில்லை, சாமி தான் கும்பிட்டேன் என்கிறார். நான் சொல்கிறேன் நீங்கள் சாமி கும்பிடுங்கள், தியானம் பண்ணுங்கள், ஆவியுடன் பேசுங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் இதனை எல்லாம் உங்களது வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ வைத்துக்கொள்ள வேண்டும், கோட்டையில் நடத்தியது தான் தவறு என்கிறேன்.

கோடநாட்டில் 5 கொலைகள் நடந்து இருக்கிறது. கோடநாடா? கொலை நாடா? என பத்திரிகைகளில் தலைப்பு செய்தி வருகிறது. அங்கு பணியில் இருந்த காவலாளி கொலை செய்யப்பட்டார். அந்த கொலையை மறைக்க, ரகசியங்கள் வெளியே தெரியாமல் இருக்க மேலும் 4 கொலைகள் நடந்து இருக்கிறது. அமைச்சர்கள் தொடர்பாக பல ரகசிய தகவல்களை ஜெயலலிதா சி.டி.யில் ஆவணமாக தயாரித்து கோடநாட்டில் வைத்து இருந்தார். அந்த ஆவணங்கள் தான் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது. 2 ஆயிரம் கோடி பணத்தை எடுக்க முயன்றதை தடுத்த காவலாளி கொலை செய்யப்பட்டார், என்கிறார்கள்.

இந்த கொலைகளின் பின்னணியில் இருப்பது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான். ஊழல் வழக்கில் தண்டனை அடைந்த சசிகலா சிறையில் உள்ளார். எடப்பாடி பழனிசாமி ஊழல் வழக்கு மட்டும் இன்றி கொலை குற்றச்சாட்டிலும் விரைவில் சிறைக்கு செல்ல இருக்கிறார்.

சென்னையில் 2-வது முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழக அரசு சார்பில் நடத்தப்பட இருக்கிறது. ஏற்கனவே ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது முதல் முறையாக நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி அளவிற்கு முதலீடுகள் வர இருப்பதாகவும், லட்சக்கணக்கான பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் இப்போது சட்டசபையில் ரூ.80 ஆயிரம் கோடி அளவிற்கு தான் முதலீடுகள் வந்து சேர்ந்ததாக தெரிவித்தார்கள். முதல் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட முதலீடுகளே இன்னும் முழுமையாக வந்து சேராத நிலையில், இப்போது மீண்டும் இரண்டாவதாக ஒரு மாநாட்டை நடத்துவது எதற்காக. கொள்ளையடிப்பதற்காக தான் இந்த மாநாட்டை நடத்த இருக்கிறார்கள்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். 

Next Story