மாவட்டம் முழுவதும் 99.13 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்


மாவட்டம் முழுவதும் 99.13 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்
x
தினத்தந்தி 30 Jan 2019 10:45 PM GMT (Updated: 30 Jan 2019 5:40 PM GMT)

மாவட்டம் முழுவதும் 99.13 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். மாணவ, மாணவிகளுக்கு வழக்கம் போல் பாடம் நடத்தினர்.

தேனி, 

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் வரை இந்த போராட்டம் நடந்தது. சாலை மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 57 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஆசிரியர்கள் பணியிடை நீக்கம், விளக்கம் கேட்டு நோட்டீஸ் வினியோகம் போன்ற நடவடிக்கைகளை கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். இதையடுத்து நேற்று முன்தினம் பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். பகலில் சுமார் 2 ஆயிரத்து 382 ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாமல் இருந்தனர். கல்வித்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்தும், மாணவர்கள் நலன் கருதியும் நேற்று முன்தினம் இரவு வரை பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வந்து வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று வேலை நிறுத்தத்தை கைவிட்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 6 ஆயிரத்து 774 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 122 பேர் விடுப்பில் உள்ளனர். நேற்று 6 ஆயிரத்து 593 பேர் பணிக்கு திரும்பினர்.

அந்த வகையில் 99.13 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். 59 ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு வரவில்லை. இதில் 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள். 31 பேர் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதால் பள்ளிகளில் வழக்கம் போல் வகுப்புகள் நடந்தன. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தினர். அதேநேரத்தில் பிறதுறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் 681 பேர் நேற்று பணிக்கு வரவில்லை.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்துக்கு வந்தால் தடுப்பதற்காக நேற்றும் தேனி, பழனிசெட்டிபட்டி பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Next Story