இறுதி பட்டியல் வெளியீடு: கரூர் மாவட்டத்தில் 8,48,189 வாக்காளர்கள்


இறுதி பட்டியல் வெளியீடு: கரூர் மாவட்டத்தில் 8,48,189 வாக்காளர்கள்
x
தினத்தந்தி 31 Jan 2019 10:45 PM GMT (Updated: 31 Jan 2019 8:55 PM GMT)

இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் அன்பழகன் வெளியிட்டார். கரூர் மாவட்டத்தில் 8,48,189 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.

கரூர்,

தமிழகத்தில் நேற்று வாக்காளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. அதேபோல, கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேற்று வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

இதுகுறித்து கலெக்டர் தெரிவித்ததாவது:-

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 2019-ம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி அன்று வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து அக்டோபர் 31-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மற்றும் இடமாற்றம் செய்ய சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் வந்த விண்ணப்பங்களின் அடிப்படையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் ஆகியன செய்யப்பட்டு இன்று(நேற்று) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இறுதி வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு:-

கரூர் மாவட்டத்திலுள்ள வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களான கரூர் மற்றும் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களான அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை பகுதிகளின் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள், கரூர், குளித்தலை நகராட்சி ஆணையர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஆகிய பகுதிகளில் வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு, அதில் அவர்களது பெயர், புகைப்படம் மற்றும் இதர பதிவுகள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

அதில் பிழைகள் ஏதேனும் இருப்பின், சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் அனைத்து வேலை நாட்களிலும் சென்று தெரிவிக்கலாம். கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி 8,33,166 வாக்காளர்கள் பட்டியலில் இருந்தனர். அதன் பின்னர் நடந்த சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின் போது புதிய வாக்காளர் சேர்க்கும் பணியும் மற்றும் இறந்து போன, குடிபெயர்ந்த வாக்காளர்களை நீக்குதல் உள்ளிட்ட பணிகள் நடந்தன. இதன் மூலம் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 5,235 பேர் நீக்கப்பட்டு, 20,258 பேர் புதிதாக சேர்க்கப்பட்டனர்.

ஜனவரி 1-ந்தேதி அன்று 18 வயது பூர்த்தியடைந்த, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத தகுதியான நபர்கள் படிவம்-6-ஐயும், இறந்துபோன, குடிபெயர்ந்த வாக்காளர்கள் பெயரை நீக்கம் செய்திட படிவம்-7-ஐயும் பூர்த்தி செய்து கொடுக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர், பாலினம், வயது, உறவு முறை மற்றும் புகைப்பட மாற்றம் செய்திட படிவம்-8, ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் ஒரு பாகத்திலிருந்து மற்றொரு பாகத்திற்கு முகவரி மாறுதல் செய்திட படிவம்-8-ஐயும் பூர்த்தி செய்து அளித்திடல் வேண்டும்.

மேலும், வாக்காளர்களுக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வு காணும் வகையில் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து தகவல்கள், ஆலோசனைகள் மற்றும் புகார்கள் ஆகியவற்றை 1950 என்ற கட்டணமில்லா எண்ணிலோ அல்லது 04324-1950 என்ற தொலைபேசி எண்ணிலோ தெரிவிக்கலாம். மேலும், அங்கீகரிக்கரிக்கப்பட்ட அனைத்து பொது சேவை மையங்களிலும் மனுக்களை பதிவு செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, கரூர் வருவாய்கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி கணேஷ், தேர்தல் தாசில்தார் சிவக்குமார் மற்றும் அனைத்து தாசில்தார்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

Next Story