உடுமலை அருகே முகாமிட்டுள்ள சின்னதம்பி யானையை வனத்துக்குள் அனுப்புவதில் சிக்கல் முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் அதிகாரிகள்


உடுமலை அருகே முகாமிட்டுள்ள சின்னதம்பி யானையை வனத்துக்குள் அனுப்புவதில் சிக்கல் முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் அதிகாரிகள்
x
தினத்தந்தி 5 Feb 2019 10:30 PM GMT (Updated: 5 Feb 2019 9:50 PM GMT)

உடுமலை அருகே முகாமிட்டுள்ள சின்னதம்பி யானையை வனத்துக்குள் திருப்பி அனுப்பவது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

மடத்துக்குளம்,

கோவை மாவட்டம் டாப்சிலிப் பகுதியில் இருந்து வெளியேறிய சின்னதம்பி யானை பொள்ளாச்சி பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்தது. பின்னர் சின்னதம்பி யானை திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி சர்க்கரை ஆலை பகுதியில் இருக்கும் புதருக்குள் சென்று பதுங்கிக்கொண்டது. இந்த யானையை அங்கிருந்து வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு கலீம், மாரியப்பன் என்ற கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. இந்த 2 கும்கி யானைகளையும், சின்னதம்பி யானை உலாவரும் பகுதியில் கட்டி வைத்து பராமரித்து வருகிறார்கள்.

சின்னதம்பி யானை இருக்கும் பகுதியில் கரும்பு தோட்டம் உள்ளதால் பசி எடுக்கும்போது கரும்புகளை தின்றுகொண்டு அங்கேயே அது தங்கி விட்டது. இதனால் சின்னதம்பி யானை அவ்வப்போது கரும்பு காட்டிற்குள் சென்று கரும்பை தின்று பசியாறி கொள்கிறது. அப்போது, கலீம் மற்றும் மாரியப்பன் ஆகிய இரண்டு கும்கியானைகள் சின்னதம்பி அருகில் சென்று அதனுடன் கொஞ்சி விளையாடுகிறது. பின்னர் சின்னதம்பி அதனிடம் இருந்து விலகி புதருக்குள் சென்று விடும். இப்படியே சின்னதம்பி, வனத்துறை அதிகாரிகளுக்கு போக்குகாட்டி வருகிறது. இதற்கிடையில் சின்னதம்பி யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் 100–க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீவிரமாக களமிறங்கியும் பயனில்லை. மேலும் பட்டாசு வெடித்தும், நெருப்பு மூட்டியும் செய்த முயற்சியும் தோல்வியை தழுவின.

இதற்கு முக்கிய காரணம் சர்க்கரை ஆலை பகுதியில் 14 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு ரகங்கள் வெவ்வேறு ரகத்தை சேர்ந்தது. இவை ஒவ்வொன்றும் வேறுபட்ட சுவை கொண்டது. இதனால் அந்த கரும்பை சுவைத்த யானை, அங்கேயே தங்கி விட்டது. அது மட்டுமல்ல கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள இடத்தில் இருந்து சற்று தொலைவில் மக்காச்சோளம் காயப்போடப்பட்டுள்ளது. சின்னதம்பி அங்கு சென்று மக்காச்சோளத்தையும் சுவைத்து சாப்பிடுகிறது. பின்னர் மீண்டும் கரும்பு காட்டிற்குள் வந்து அங்கு வைக்கப்பட்டள்ள தண்ணீரை குடித்துக்கொள்கிறது. இப்படியே தொடர்ந்து சின்னதம்பி செய்வதால், அடுத்த கட்டநடவடிக்கைகள் குறித்து வனத்துறை அதிகாரிகள் நேற்று 2–வது நாளாக ஆலோசித்து வருகிறார்கள்.

ஆனால் இந்த ஆலோசனையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் சின்ன தம்பியை வனத்துக்குள் திருப்பி அனுப்பதில் ஒரு முடிவும் எடுக்க முடியாமல் வனத்துறை அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். இதனால் சின்னதம்பியை வனத்துக்குள் திருப்ப அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Next Story