கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை மதுரை மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு
2014–ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
மதுரை,
மதுரை முனிச்சாலை பகுதியை சேர்ந்தவர் மன்னர் மைதீன். இதேபகுதியை சேர்ந்தவர் இப்ராகிம் ஷா. இவர்கள் இருவரும் கடந்த 2005–ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். ஆனால் இந்த வழக்கு விசாரணை முடிவில் இப்ராகிம் ஷாவுக்கு மட்டும் தண்டனை விதிக்கப்பட்டது. மன்னர் மைதீன் விடுதலை செய்யப்பட்டார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இதற்கிடையே பரமக்குடியை சேர்ந்த முருகன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் போலீசாருக்கு உளவு தெரிவித்ததாக, மன்னர் மைதீன் மீது வாழைக்காய் ரபீக் என்ற ரபீக்ராஜா என்பவர் சந்தேகம் அடைந்தார். இதனால் இப்ராகிம் ஷா, வாழைக்காய் ரபீக் ஆகிய இருவரும் சேர்ந்து மன்னர் மைதீனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த 21.1.2014 அன்று முனிச்சாலை பகுதியில் உள்ள ஒரு டீக்கடை அருகில் மன்னர் மைதீன் நின்றிருந்தபோது, அங்கு வந்த இப்ராகிம் ஷா, வாழைக்காய் ரபீக், பிரகாஷ் ஆகியோர் சேர்ந்து அவரை வெட்டிக்கொலை செய்தனர். மேலும் அதனை தடுக்க வந்தவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து, அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை 5–வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கு நிலுவையில் இருந்தபோது வாழைக்காய் ரபீக் இறந்துவிட்டார். இந்தநிலையில் அந்த வழக்கின் தீர்ப்பை நேற்று நீதிபதி மதுசூதனன் பிறப்பித்தார். அதில், குற்றவாளிகள் இப்ராகிம் ஷா, பிரகாஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.