வடுவூர் சரணாலயத்திற்கு ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வருகை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி


வடுவூர் சரணாலயத்திற்கு ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வருகை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 7 Feb 2019 10:45 PM GMT (Updated: 7 Feb 2019 6:42 PM GMT)

வடுவூர் சரணாலயத்திற்கு ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வருகையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

வடுவூர்,

திருவாரூர் மாவட்டம் வடுவூரில் உள்ள ஏரி 316 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களின் எல்லையில் சுற்றிலும் வயல்களுடன் ரம்மியமான சூழ்நிலையில் அமைந்துள்ள இந்த ஏரி பறவைகள் சரணாலயமாக திகழ்கிறது. இந்த ஏரிக்கு காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் வருகிறது. செப்டம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை வடுவூர் ஏரியில் தண்ணீர் நிரம்பி இருப்பது வழக்கம். இங்கு நிலவும் இயற்கை சூழல் பறவைகளுக்கு ஏற்றதாக இருக்கிறது.

இதன் காரணமாக இந்த காலகட்டத்தில் இந்த ஏரியில் தங்குவதை வெளிநாட்டு பறவைகள் வழக்கமாக கொண்டுள்ளன. வடுவூரில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்க நாடுகளை சேர்ந்த அரிய வகை பறவை இனங்களை ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் இறுதி வரை காணலாம்.

இனப்பெருக்கத்துக்காக வெளிநாட்டு பறவைகள் வடுவூரில் முகாமிடுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நீர்க்காகம், பாம்புதாரா, பெரியகொக்கு, மடையான், கூழைக்கிடா, வெள்ளை, கறுப்பு மற்றும் சாம்பல் நிற அரிவாள் மூக்கன், கரண்டிமூக்கன், உண்ணிக்கொக்கு, நாமக்கோழி உள்ளிட்ட அரிய வகை பறவைகளை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். ஏரியில் ஆங்காங்கே அமைந்த மணல் திட்டுகளில் மரங்கள் அடர்ந்து வளர்ந்து இருக்கின்றன.

இதில் பறவைகள் அமர்ந்திருக்கும் காட்சி சுற்றுலா பயணிகளை பரவசப்படுத்துகிறது. பறவைகள் இரை தேட புறப்படும் காலை நேரத்திலும், மாலையில் ஏரிக்கு திரும்பி வரும் காட்சிகளை காண வசதியாக ஏரிக்கரையோரங்களில் 2 இடங்களில் பார்வையாளர்கள் மாடங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

வடுவூர் ஏரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் நிரம்பி இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். படகு சவாரி தொடங்க வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

கடந்த நவம்பர் 15-ந் தேதி வீசிய கஜா புயலால் வெளிநாட்டு பறவைகள் வரத்து வெகுவாக குறைந்தது. மேலும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் சீசன் மாதமாக இருந்தபோதும் இங்கு பறவைகள் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் இயற்கை ஆர்வலர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். மேலும் கடந்த சில மாதங்களாக பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இருந்ததால் பறவைகளை காண்பது அபூர்வமாக இருந்தது.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகள் ஏரிக்கு அதிக அளவில் வருவதை காண முடிகிறது. இதனுடன் புதிதாக பிறந்த பறவைகளும் ஏரியில் சிறகடித்து பறக்க தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தற்போது 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வடுவூர் ஏரியில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கஜா புயல் காரணமாக வேதாரண்யம், கோடியக்கரை, முத்துப்பேட்டை அருகே உள்ள உதயமார்த்தாண்ட புரம் ஆகிய பகுதிகளில் பறவைகளின் வாழ்விடங்கள் சேதம் அடைந்ததால் வடுவூர் பகுதியினை பாதுகாப்பாக உணர்ந்து இந்த வடுவூர் ஏரியில் அமைந்திருக்கின்ற மரங்களை பறவைகள் நாடி வருவதாகவும் இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

வடுவூர் ஏரி தஞ்சை, மன்னார்குடி மாநில நெடுஞ்சாலையில் சாலை ஓரத்திலேயே அமைந்திருப்பதால் இந்த சாலையை கடக்கும் பயணிகள் அனைவரும் சற்று நேரம் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு பறவைகளை ரசித்து விட்டு பின்னர் தொடர்ந்து செல்வதை காண முடிகிறது. சீசன் காலத்திலேயே பறவைகளை காண முடியவில்லையே என சோகத்தில் இருந்த சுற்றுலா பயணிகள் தற்போது ஏராளமான பறவைகள் வந்துள்ளதால் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Next Story