திருவாரூரில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி நடவடிக்கை எடுக்க கோரிக்கை


திருவாரூரில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 9 Feb 2019 10:30 PM GMT (Updated: 9 Feb 2019 7:02 PM GMT)

திருவாரூரில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்,

திருவாரூர் நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் அதிகமான மாடுகள் வளர்க்கப்படுகிறது, இந்த மாடுகள் உரிய முறையில் வளர்க்கப்படாததால் திருவாரூர் பஸ் நிலையம், கடைவீதி, பனகல் சாலை, தேரோடும் 4 வீதிகளில் துர்க்காலயா ரோடு போன்ற பிரதான சாலைகளில் சுற்றித்திரிகின்றன. சரியான உணவு, தீவனங்கள் கிடைக்காததால் சுவற்றில் ஒட்டப்படும் போஸ்டர்கள், சாலை ஓரங்களில் கிடக்கும் குப்பைகளில் உள்ள உணவு கழிவுகளை தின்று பசியை போக்கி வருகிறது.

அப்போது உணவு பொருட்களுடன் பிளாஸ்டிக்கையும் சேர்த்து தின்றுவிடுவதால் மாடுகளுக்கு உடல்நலம் பாதிக்கப்படுவதுடன், பாலிலும் நச்சுதன்மை ஏற்படும் நிலை உருவாகின்றது. காலை முதல் இரவு வரை உணவுக்காக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள், நள்ளிரவுகளில் நேரங்களில் சாலைகளில் ஒய்யாரமாக படுத்து கொள்கிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கால்நடை மீது மோதி கை, கால் எலும்பு முறிவு ஏற்படுவதுடன், உயிரிழப்பு சம்பவங்களும் நடந்து வருகிறது.

இதில் கனரக வாகனங்கள் மோதி கால் நடைகள் இறக்கும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. திருவாரூர் கடைவீதியில் காய்கறி, பழக்கடைகளை கழிவுகளை உண்ணுவதற்காக மாடுகள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. கடைக்காரர்கள் தங்களது பொருட்களை பாதுகாக்க மாடுகளை திடீரென விரட்டுகின்றனர். அப்போது மிரண்டு ஓடும் மாடுகளால் அந்த வழியாக நடந்து செல்பவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்றது. மேலும் குதிரைகள் அதிகமாக சுற்றித்திரிகின்றன.

இதே போல் திருவாரூர் தண்டலை பகுதியை சேர்ந்த மாடுகள் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மருத்துவமனை செல்லும் பாதைகளை ஆக்கிரமிக்கின்றன. மேலும் திருவாரூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையும் விட்டு வைக்காமல் இரவு நேரங்களில் சாலைகளில் படுத்து கொள்கிறது. இதனால் வெளியூரில் இருந்து வரும் வாகனங்களை ஓட்டிவருபவர்களுக்கு, மாடுகள் சாலைகளில் படுத்து இருப்பதை கண்டு நிலைதடுமாறுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

மாடு, ஆடுகள், குதிரைகள் முறையாக பராமரிக்காமல் சாலைகளில் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பலமுறை திருவாரூர் நகராட்சி, ஊராட்சி நிர்வாகமும் எச்சரிக்கை விடுத்தும் எந்தவித பயனுமில்லை. எனவே கால்நடைகளால் ஏற்படும் விபத்துகள், உயிர் சேதங்களை தடுத்திட முக்கிய இடங்களில் கால்நடை பட்டிகளை திறக்க வேண்டும். சாலைகளில் சுதந்திரமாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து பட்டிகளில் அடைத்திட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story