சேலத்தில் போலி ஆவணம் கொடுத்து ரூ.5½ லட்சம் மோசடி 2 பேர் மீது வழக்கு


சேலத்தில் போலி ஆவணம் கொடுத்து ரூ.5½ லட்சம் மோசடி 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 10 Feb 2019 11:00 PM GMT (Updated: 10 Feb 2019 7:54 PM GMT)

சேலத்தில் போலி ஆவணம் கொடுத்து நிதி நிறுவனத்தில் ரூ.5½ லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

கருப்பூர், 

சேலம் கருப்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். அங்குள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் கருப்பூர் போலீசில் ஒரு புகார் கொடுத்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

சேலம் வீரகனூர் அருகே உள்ள ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இலுப்பநத்தம் காட்டு கொட்டாயை சேர்ந்தவர் செல்வகுமார். இவர்கள் 2 பேரும் சேர்ந்து கடந்த 2017–ம் ஆண்டு நெல் அறுவடை செய்யும் எந்திரத்தின் ஆர்.சி.புத்தகத்தை வைத்து எங்கள் நிறுவனத்தில் ரூ.5½ லட்சம் கடன் பெற்றனர். ஓராண்டை கடந்தும் வாங்கிய கடன் தொகையை அவர்கள் திரும்ப செலுத்தவில்லை.

இதுதொடர்பாக அவர்களிடம் கேட்ட போது ஒரு காசோலையை வழங்கினர். அந்த காசோலையில் போலியான கையெழுத்து உள்ளது என்று கூறி, சம்பந்தப்பட்ட வங்கியில் இருந்து திரும்ப வந்து விட்டது. பின்னர் அவர்கள் கொடுத்த ஆர்.சி.புத்தகத்தையும் சோதனை செய்த போது அதுவும் போலி என்பது தெரிந்தது.

எனவே போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.5½ லட்சம் மோசடி செய்த 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த புகாரின் பேரில் சரவணன், செல்வகுமார் ஆகிய 2 பேர் மீது மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story