திருச்சி விமான நிலையத்தில் ரூ.6 லட்சம் கடத்தல் தங்க கட்டிகள் பறிமுதல் பெண் பயணியிடம் விசாரணை
திருச்சி விமான நிலையத்தில் ரூ.6½ லட்சம் கடத்தல் தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பெண் பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செம்பட்டு,
திருச்சி விமான நிலையத்திற்கு விமானங்களில் வந்து இறங்கும் பயணிகள் மற்றும் திருச்சியில் இருந்து வெளிநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு விமானங்களில் செல்ல வரும் பயணிகள் மற்றும் அவர்களுடைய உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். இத்தகைய சோதனைகளின்போது பயணிகள் கடத்தி வரும் தங்க கட்டிகள், நகைகள் மற்றும் வெளிநாட்டுப்பணம் உள்ளிட்டவை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.
தங்க கட்டிகள் பறிமுதல்
இந்நிலையில் நேற்று காலை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஒரு தனியார் விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. அதில் இருந்து இறங்கி வந்த பயணிகளை, திருச்சி விமான நிலைய மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு பெண் பயணி தனது கைப்பையில் மறைத்து சிறிய உருளை வடிவில் 2 தங்க கட்டிகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர் தஞ்சையை சேர்ந்த லக்மிஷா என்பதும், தலா 100 கிராம் எடை கொண்ட 2 தங்க கட்டிகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, லக்மிஷாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.6 லட்சத்து 62 ஆயிரம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story