தர்காவலசை அரசு பள்ளி அருகே குடிநீர் குழாய், மின் கம்பங்களை சீரமைக்க கோரிக்கை
தர்காவலசை அரசு பள்ளி அருகே குடிநீர் குழாய், மின்கம்பங்களை சீரமைக்க நாம் தமிழர் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
பனைக்குளம்,
மண்டபம் ஒன்றியம் என்மனங்கொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட தர்காவலசை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கடந்த 3 மாதங்களுக்கு மேலாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இந்த பகுதியில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் இதுபோன்று தண்ணீர் வீணாகி வருவது மனவேதனையை உண்டாக்குகிறது. மேலும் இதே பகுதியில் 3 மின் கம்பங்கள் மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது.
இதுதவிர மின் கம்பிகளும் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் பள்ளி குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை வந்து பார்வையிடவோ, நடவடிக்கை எடுக்கவோ இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவ–மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
எனவே இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பில் மண்டபம் ஒன்றிய செயலாளர் கணேசமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் காலதாமதம் செய்யும்பட்சத்தில் பொதுமக்களை திரட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.