இன்று முதல் கட்டாய ஹெல்மெட்: அராஜக வழியில் பொதுமக்களுக்கு கவர்னர் தொல்லை நாராயணசாமி குற்றச்சாட்டு


இன்று முதல் கட்டாய ஹெல்மெட்: அராஜக வழியில் பொதுமக்களுக்கு கவர்னர் தொல்லை நாராயணசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 Feb 2019 11:45 PM GMT (Updated: 10 Feb 2019 11:14 PM GMT)

கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை அராஜக வழியில் அமல்படுத்தி மக்களுக்கு கவர்னர் தொல்லை கொடுக்கிறார் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.

புதுச்சேரி,

புதுவையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் இன்று (திங்கட்கிழமை) முதல் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா உத்தரவிட்டுள்ளார். ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு முதல் முறை ரூ.100 அபராதம் விதிக்கப்படும். மீண்டும் பிடிபட்டால் டிரைவிங் லைசென்சு ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

புதுவை மக்கள் மத்தியில் இந்த திடீர் உத்தரவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் குறித்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிவது சம்பந்தமாக ஏற்கனவே சுமார் 1½ வருடங்களுக்கு முன் உத்தரவிடப்பட்டது. அப்போது பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சட்டமன்றத்திலும் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டது. இதையொட்டி ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி படிப்படியாக நடைமுறைப்படுத்துவது என அப்போது முடிவு செய்யப்பட்டது. அத்துடன் பிரச்சினை முடிந்தது.

இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு உள்ளது. இருந்தாலும் மக்களுக்கு சிரமம் இன்றி விழிப்புணர்வு ஏற்படுத்த கூறியுள்ளோம். ஆனால் அதிகார துஷ்பிரயோகம் செய்து காவல், போக்குவரத்து துறை அதிகாரிகளை அழைத்து கவர்னர் கிரண்பெடி மிரட்டுவதும், பொதுமக்களுக்கு இடையூறாக வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்துவதுமாக உள்ளார்.

கவர்னருக்கு இது அழகல்ல. கடந்த 2 தினங்களுக்கு முன்பு கவர்னர் கிரண்பெடி பாரதிதாசன் கல்லூரி அருகே நின்று கொண்டு ஹெல்மெட் தொடர்பாக ஆவேசமாக பேசிய வீடியோ வெளியானது. இது போக்குவரத்து, காவல்துறை செய்ய வேண்டிய வேலை. ஆனால் கவர்னர் பதவிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக அவர் செயல்படுகிறார். இந்தியாவில் எந்த கவர்னரும் இதுபோல் செய்வதில்லை.

அவரது செயல்பாடு குறித்து பிரதமர், மத்திய அரசிடமும் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. புதுவையின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கவே கிரண்பெடி கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹெல்மெட் அணியும் விவகாரத்தில் போலீஸ் டி.ஜி.பி., போக்குவரத்து துறை அதிகாரிகளை அழைத்து சட்டமன்றத்தில் முடிவு செய்தபடி நிறைவேற்றுமாறு கூறியுள்ளேன். எங்களுக்கு அதிகாரிகளின் நிலை தெரிகிறது. கவர்னர் அழுத்தம் கொடுப்பதும் தெரியும். இந்த நெருக்கடிக்கு கவர்னர்தான் காரணம். புதுவை மக்கள் மென்மையானவர்கள். விதிமுறைகளை கடைபிடிக்குமாறு அராஜக வழியில் மக்களுக்கு கவர்னர் தொல்லை கொடுக்கலாம். நாங்கள் அதை செய்யமாட்டோம்.

ஹெல்மெட் அணிவது உயிருக்கு பாதுகாப்பானது. ஆனால் அதற்கு காலஅவகாசம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கட்டயாம் ஹெல்மெட் அணியவேண்டும் என்றாலும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கூறியுள்ளேன். கவர்னருக்கும், எங்களுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு அதிகாரிகள் முழிக்கிறார்கள். கவர்னரின் அடாவடி, அதிகார துஷ்பிரயோகம் இப்போது நடக்கிறது.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

அவரிடம், கட்டாய ஹெல்மெட் திட்டம் இன்று அமல்படுத்த உள்ள நிலையில் ஹெல்மெட் அணியாதவர்களிடம் அபராதம் விதிக்கக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளீர்களா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, சில விவரங்களை அதிகாரிகளிடம் வாய்மொழியாக தெரிவித்து உள்ளேன் என்று மட்டும் கூறினார்.


Next Story