நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும்


நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும்
x
தினத்தந்தி 12 Feb 2019 4:15 AM IST (Updated: 11 Feb 2019 11:49 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று கீரப்பாளையத்தில் கே.எஸ்.அழகிரி கூறினார்.

புவனகிரி, 

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு கே.எஸ்.அழகிரி, அவரது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த கீரப்பாளையத்திற்கு நேற்று வந்தார். அப்போது காங்கிரசார் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், மாலை மற்றும் சால்வை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து கே.எஸ்.அழகிரி, கடைவீதியில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர், கட்சி கொடியையும் ஏற்றி வைத்தார். பின்னர் அவர், சேத்துக்கால் செல்லியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

ராஜாஜி, மூப்பனார், கக்கன் போன்றவர்கள் அமர்ந்த இடத்தில் என்னை அடையாளம் கண்டு தலைவராக்கி இருக்கிறார் ராகுல்காந்தி. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும். இந்த கூட்டணிக்கு தலைமை தாங்குகிற கட்சியை கமல்ஹாசன் விமர்சித்து இருக்கிறார். அதனால் அவர் கூட்டணியில் சேர வாய்ப்பில்லை. அரசியலில் கமல்ஹாசன் செய்திருப்பது மறைமுகமாக பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பதாக உள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த மாநிலங்களில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி, விவசாய கடனை தள்ளுபடி செய்வது குறித்து அறிவிக்காமல், விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் தருவதாக கூறியிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கடலூர் மாவட்ட தலைவர் பெரியசாமி, முன்னாள் தலைவர் செந்தில்குமார் வர்த்தக காங்கிரஸ் பிரிவு தலைவர் சித்தார்த்தன், காங்கிரஸ் பிரமுகர்கள் சங்கர், சேரன், ராதாகிருஷ்ணன், டாக்டர் அருண் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

Next Story