காஞ்சி சங்கர மடத்தில் சங்கராச்சாரியாருக்கு மெழுகு சிலை பக்தர்கள் தரிசனம்
காஞ்சி சங்கர மடத்தில், முக்தி அடைந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சாமிக்கு மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மடத்திற்கு வருகை தரும் பக்தர்கள் அந்த மெழுகு சிலையை தரிசித்துவிட்டு செல்கின்றனர்.
சென்னை,
காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள் கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து மார்ச் 1-ந் தேதி ஸ்ரீ ஜெயேந்திரரின் உடல் பிருந்தாவனத்தில் பிரவேசம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜெயேந்திரருக்கு ஸ்ரத்தாஞ்சலி, மகா ஆராதனை உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
இதைத்தொடர்ந்து, பிருந்தாவனத்தில் துளசி மாடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அதன்படி, கூர்ம பீடத்துடன் கருங்கல் பீடம் அமைக்கப்பட்டு, ஜெயேந்திரர் அஷ்டானத்தில் ஏகாதச ருத்ர ஜப ஹோமம், சண்டி பாராயணம் ஹோமம் நடத்தப்பட்டது. இதைதொடர்ந்து காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சாமிகள் பல்வேறு பூஜைகள் செய்து, அதிஷ்டான பிருந்தாவனத்தில் துளசி ஸ்தாபனம் செய்தார்.
இதையடுத்து பக்தர்களுக்காக ஜெயேந்திரர் பவனில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சாமியின் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜெயேந்திர சாமி வழக்கமாக அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவது போல தத்ரூபமாக இந்த மெழுகு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
சங்கர மடத்துக்கு வரும் பக்தர்கள் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றுவிட்டு ஜெயேந்திரர் சாமியின் மெழுகு சிலையையும் பார்த்து வணங்கி செல்கின்றனர். ஏற்கனவே காஞ்சி மகாபெரியவருக்கு காஞ்சி சங்கர மட பிருந்தவான அதிஷ்டானத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story