தஞ்சை அருகே முதியவரை தாக்கி கண்காணிப்பு கேமரா-கணினி கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
தஞ்சை அருகே முதியவரை தாக்கி கண்காணிப்பு கேமரா, கணினியை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சாலியமங்கலம்,
தஞ்சை அருகே உள்ள பூண்டி நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது65). இவர் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். தற்போது இயற்கை விவசாயம் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் விவசாயம் தொடர்பான பயிற்சி பெறுவதற்காக திருச்சிக்கு புறப்பட்டு சென்றார்.
இதையொட்டி அவர் தனது நண்பர் அப்பகுதியில் உள்ள நல்லவன்னியன் குடிகாடு கிராமத்தை சேர்ந்த கோபால்சாமி (65) என்பவரிடம் வீட்டு சாவியை ஒப்படைத்து, வீட்டை பார்த்து கொள்ளுமாறு கூறினார். இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலை கோபால்சாமி, மாணிக்கத்தின் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. இதையடுத்து கோபால்சாமி கதவை திறந்தபோது, அங்கிருந்த மர்ம நபர்கள் 2 பேர் கோபால்சாமியின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கினர்.
இதில் ரத்தம் சொட்டிய நிலையில் கோபால்சாமி கீழே விழுந்து மயக்கம் அடைந்தார். இதைத்தொடர்ந்து மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்தனர். அதில் நகை, பணம் இல்லாததால் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் கணினியை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இந்த நிலையில் கோபால்சாமியை தேடி, அவருடைய மனைவி மாணிக்கத்தின் வீட்டுக்கு வந்தார். அப்போது கோபால்சாமி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கோபால்சாமியை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை தாக்கி கண்காணிப்பு கேமரா, கணினியை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story