துறைமுக முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி மீனவர்கள் காலவரையற்ற போராட்டம் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை
புதுச்சேரி துறைமுக முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி மீனவர்கள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர். அவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.
புதுச்சேரி,
புதுச்சேரி தேங்காய்திட்டில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கிருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் கடல்நீரோட்ட மாற்றத்தால் துறைமுக முகத்துவாரத்தில் மணல் தேங்கிக்கிடக்கிறது.
இதனால் துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்று வரும் படகுகள் தரை தட்டி சேதம் அடைகிறது. எனவே முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை தூர்வாரப்படவில்லை.
இந்த நிலையில் முகத்துவாரத்தை உடனடியாக தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர். அவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.
தங்கள் படகுகளை தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த போராட்டத்தின் காரணமாக புதுவையில் மீன்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.