வெடிகுண்டு வீச்சு சம்பவம்: விசாரணைக்கு அழைத்துவந்த வாலிபர்களை விடுவிக்கக்கோரி மங்கலம் போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை


வெடிகுண்டு வீச்சு சம்பவம்: விசாரணைக்கு அழைத்துவந்த வாலிபர்களை விடுவிக்கக்கோரி மங்கலம் போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 12 Feb 2019 11:06 PM GMT (Updated: 12 Feb 2019 11:06 PM GMT)

காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசி சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துவந்த வாலிபர்களை விடுவிக்கக்கோரி மங்கலம் போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

வில்லியனூர்,

புதுவை மாநிலம் ஏம்பலம் அருகே உள்ள மணக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சபரி. இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர். கடந்த 10–ந் தேதி இரவு சபரி தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவு 1 மணியளவில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 மர்மநபர்கள், சபரி வீட்டின் மீது 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

வெடிகுண்டுகள் வீட்டின் முன்பகுதியில் உள்ள சிமெண்டு கூரையில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் சபரியின் தாய் ராஜேஸ்வரி காயமடைந்தார். அவர் உடனடியாக கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த மங்கலம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து, வெடிகுண்டு வீச்சில் சேதமடைந்த வீட்டை பார்வையிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின்பேரில் 8 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் 3 வாலிபர்கள் தமிழக பகுதியை சேர்ந்த நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இதை அறிந்த கிராம மக்கள், போலீசார் பிடித்துச்சென்ற வாலிபர்களை விடுவிக்கக்கோரி நல்லாத்தூர் மெயின்ரோட்டில் சாலைமறியல் செய்தனர். அவர்களிடம் ரெட்டிச்சாவடி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தனர். இதன்பின்னர் மங்கலம் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, சப்–இன்ஸ்பெக்டர் கதிரேசன் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் தங்கள் கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் ஈடுபடவில்லை என்று முறையிட்டனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்திவிட்டு, 3 வாலிபர்களையும் விடுவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்துசென்றனர்.


Next Story