காதலர் தினத்தன்று பொது அமைதியை குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
காதலர் தினத்தன்று பொது அமைதியை குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் எச்சரித்துள்ளார்.
வேலூர்,
உலகம் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் இளைஞர்கள் தன் மனதிற்கு பிடித்த பெண்ணிடம் காதலை வெளிப்படுத்துகிறார்கள். அதேபோன்று காதலிக்கும் பெண்கள், ஆண்கள் தங்கள் காதலன், காதலி மனதில் நீங்கா இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக ரோஜாப்பூ, மோதிரம் உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருட்களை வாங்கி கொடுக்கிறார்கள். மேலும் காதலர்கள் தங்களுக்கு பிடித்தமான இடத்துக்கு சென்று காதலர் தினத்தை கொண்டாடுவார்கள்.
ஆனால் இந்து முன்னணி உள்பட சில அமைப்புகள் காதலர் தினத்தை கலாசார சீரழிவாக கருதுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்குகளுக்கு திருமணம் செய்து வைப்பது, காதல் ஜோடிகளை பிடித்து ராக்கி கயிற்றை கட்ட வைப்பது மற்றும் காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க முயல்வது உள்ளிட்டவற்றின் மூலம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன்படி இந்தாண்டும் காதலர் தினத்துக்கும் இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வேலூர் கோட்ட இந்து முன்னணி சார்பில் வேலூர் கோட்டையில் காதலர் தின எதிர்ப்பு நிகழ்ச்சி நடத்தப்போவதாக தெரிவித்து உள்ளனர். மேலும் அன்றைய தினம் கோட்டை, பூங்கா, கோவில் உள்ளிட்ட பொது இடங்களில் அநாகரிகமாகவும், ஆபாசமாகவும் நடந்து கொள்ளும் காதல் ஜோடிகளை பிடித்து, அங்கேயே தாலியை கொடுத்து இலவச திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாக வேலூர் கோட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் காதலர் தினத்தன்று காதலர்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பொது அமைதியை குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காதலர் தினமான நாளை (இன்று) காதலர்கள் வழிபாட்டு தலங்கள், பூங்காக்கள், உணவகங்கள், கோட்டை உள்ளிட்டவற்றில் அதிகளவில் கூடுவார்கள். காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சில அமைப்புகள் காதலர்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையில் ஈடுபட்டு பொது அமைதியை குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story