ரூ.28 ஆயிரத்து 500 கோடியில் தாராவியை ஐக்கிய அரபு அமீரக நிறுவனம் சீரமைக்கிறது விரைவில் பூமி பூஜை
ரூ.28 ஆயிரத்து 500 கோடி செலவில் தாராவியை ஐக்கிய அரபு அமீரக நிறுவனம் சீரமைக்கிறது. இதற்கான பூமி பூஜை விரைவில் நடக்கிறது.
மும்பை,
ஆசியாவின் பெரிய குடிசைப்பகுதியாக தாராவி உள்ளது. இது குட்டி தமிழகம் என்றும் வர்ணிக்கப்படுகிறது. தாராவியை குடிசையில்லா பகுதியாக மாற்ற கடந்த 15 ஆண்டுகளாக மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தற்போது வரை தாராவியை முழுமையாக சீரமைக்க முடியவில்லை.
கடந்த 2004-ம் ஆண்டு தாராவி சீரமைப்பு திட்டத்திற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்தது. 2007-ம் ஆண்டு தாராவி சீரமைப்பு திட்டத்துக்கான உலகளாவிய டெண்டர் விடப்பட்டது. 19 நிறுவனங்கள் தாராவியை சீரமைக்க விருப்பம் தெரிவித்தன.
இதில், தாராவி சீரமைப்பு திட்டம் தொடங்குவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் திட்டத்தில் தெளிவு இல்லை என கூறி 5 நிறுவனங்கள் பின்வாங்கின. ஒருகட்டத்தில் மீதம் இருந்த 14 நிறுவனங்களில் 7 பேர் மட்டுமே அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய தயாராக இருந்த நிலையில், 2009-ம் ஆண்டு மாநகராட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
கைவிடப்பட்ட செக்டார் திட்டம்
அதில், தாராவியில் உள்ள குடிசைவாசிகளில் 37 சதவீதம் போ் மட்டுமே இலவச வீடு கட்டி கொடுக்க தகுதியானவர்கள் என கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து இந்த தாராவி சீரமைப்பு திட்டம் கைவிடப்பட்டது.
2010-ம் ஆண்டு மாநில அரசின் செயலாளர்கள் அடங்கிய கமிட்டி தாராவியை 5 செக்டார்களாக பிரித்து சீரமைக்க பரிந்துரை செய்தது. இதையடுத்து 2011-ம் ஆண்டு தாராவியை 5 செக்டார்களாக பிரித்து சீரமைக்க அப்போதைய முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் ஒப்புதல் அளித்தார். ஆனால் இந்த திட்டத்தில் மகாடாவால் செக்டார் 5-ல் மட்டும் அடுக்குமாடி குடியிருப்பை கட்ட முடிந்தது.
இதில், 266 குடும்பத்தினர் குடியேறினர். அதன்பிறகு தாராவி மக்களின் எதிர்ப்பால் செக்டார் திட்டமும் கைவிடப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரக நிறுவனம்
இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து தாராவியை சீரமைக்க அரசு முன்வந்தது. தாராவி சீரமைப்பு திட்டத்தில் அரசும் 20 சதவீதம் முதலீடு செய்யும் என அறிவித்தது. மேலும் இந்த திட்டத்திற்காக உலகளாவிய டெண்டர் விடப்பட்டது. இதில், தாராவியை சீரமைக்க ‘சீலிங்க் டெக்னாலஜி கார்ப்பரேஷன்' என்ற ஐக்கிய அரபு அமீரக நிறுவனமும், அதானி உள்கட்டமைப்பு நிறுவனமும் விருப்பம் தெரிவித்து இருந்தன.
இந்தநிலையில் தாராவியை சீரமைக்கும் பணியை செய்ய மாநில செயலாளர்கள் அடங்கிய உயர்மட்ட கமிட்டி ‘சீலிங்க் டெக்னாலஜி கார்ப்பரேஷன்’ நிறுவனத்தை தேர்வு செய்து உள்ளது.
அரச குடும்பம் நிதி உதவி
இந்த நிறுவனம் நிலாங் ஷா, ராஜேஸ் ராமசந்திரன், ஜிக்னேஷ் சாங்வி, ஹீத்தன் ஷா ஆகிய 4 தனிநபர்களை கொண்டு நடத்தப்படுகிறது. இதில் 2 பேர் இந்தியர், 2 பேர் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் ஆவர். இவர்கள் 4 பேரும் தான் தாராவி சீரமைப்பு திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். மேலும் ‘சீலிங்க் டெக்னாலஜி கார்ப்பரேஷன்’ நிறுவனம் ஐக்கிய அரபு அமீரக அரச குடும்பத்தினரின் நிதி உதவியில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத அந்த நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ‘‘அபுதாபியில் உள்ள அரச குடும்பத்தினர் இந்த திட்டத்திற்கு ஆதரவாக உள்ளனர். அவர்கள் தான் திட்டத்திற்கான நிதியை வழங்குகின்றனர்’’ என்றார்.
தாராவி சீரமைப்பு திட்டத்திற்காக ரூ.28 ஆயிரத்து 500 கோடி செலவிடப்பட உள்ளது. இதற்காக பூமி பூஜை அடுத்த மாதம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
பணம் மட்டும் போதாது
இந்த திட்டம் குறித்து மும்பையை சேர்ந்த ரியல் எஸ்டேட் ஆராய்ச்சி நிறுவனம் கருத்து தெரிவிக்கையில், “ஐக்கிய அரபு அமீரக நிறுவனத்திடம் அதிக பணம் இருக்கலாம். தாராவி திட்டத்திற்காக அவர்கள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருக்கலாம். ஆனால் பணத்தை மட்டும் வைத்து அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியாது. அந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன” என கூறியுள்ளது.
இதேபோல இந்த திட்டத்திற்கு தாராவி மக்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இல்லை. இது குறித்து தாராவியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ‘15 ஆண்டுகளாக குடிசைவாசிகளுக்கு வீடு கிடைத்துவிடும் என்று தான் சொல்கிறார்கள். ஆனால் இன்று வரை வீடு கிடைக்கவில்லை. எங்களை சந்திக்கவோ அல்லது நாங்கள் ஏற்றுக்கொள்ளும் வகையிலான திட்டத்தையோ அரசு கொண்டு வரவில்லை’ என்றார்.
Related Tags :
Next Story