பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்தம் செல்போன்-ஏ.டி.எம். சேவை பாதிக்கும் அபாயம்


பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்தம் செல்போன்-ஏ.டி.எம். சேவை பாதிக்கும் அபாயம்
x
தினத்தந்தி 19 Feb 2019 11:00 PM GMT (Updated: 19 Feb 2019 5:04 PM GMT)

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக செல்போன்- ஏ.டி.எம். சேவை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல், 

பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வுடன் கூடிய 3-வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். செல்போன் கோபுரங்களின் பராமரிப்பு பணியை தனியாருக்கு விடக்கூடாது. மேலும் பி.எஸ்.என்.எல். 4-ஜி சேவையை விரைவில் தொடங்க வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், அலுவலர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். எனவே திண்டுக்கல், பழனி, வத்தலக்குண்டுவில் உள்ள பி.எஸ்.என்.எல். கோட்ட அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் கோட்ட அலுவலகங்களில் கட்டணம் வசூலித்தல், புதிய இணைப்புகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் பெரிதும் முடங்கின.

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 17-ந்தேதி நள்ளிரவு 12 மணி முதலே வேலைநிறுத்தத்தை தொடங்கி விட்டனர். இதனால் செல்போன் கோபுர கருவிகள் பராமரிப்பு 2 நாட்களாக நடைபெறவில்லை. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள 274 செல்போன் கோபுர கருவிகளும் முறையான பராமரிப்பு செய்யப்படவில்லை. இதற்கிடையே இன்றும் (புதன்கிழமை) வேலைநிறுத்தம் நடக்கிறது.

எனவே, பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக மலைப்பகுதியில் செல்போன் சேவை முற்றிலும் தடைபடும் வாய்ப்பு உள்ளது. மேலும் அரசு அலுவலகங்களில் பி.எஸ்.என்.எல். இணையதள சேவையே வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் அரசு அலுவலகங்களிலும் பணி பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் வங்கி ஏ.டி.எம். மையங்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக பி.எஸ்.என்.எல். அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே திண்டுக்கல் பி.எஸ்.என்.எல். கோட்ட அலுவலகம் முன்பு ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் அருளானந்தம், ஆரோக்கியம், பூபதி, அய்யனார்சாமி மற்றும் அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் முபாரக்அலி, எல்.ஐ.சி. ஊழியர்கள் சங்க நிர்வாகி வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Next Story