மணல் கடத்தலை தடுத்த போலீஸ்காரர் கொலையில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


மணல் கடத்தலை தடுத்த போலீஸ்காரர் கொலையில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 19 Feb 2019 11:45 PM GMT (Updated: 19 Feb 2019 7:38 PM GMT)

நெல்லை அருகே மணல் கடத்தலை தடுத்த போலீஸ்காரர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் துரை (வயது 33). இவர் விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் தனிப்பிரிவு போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 6-ந்தேதி இரவு விஜயநாராயணத்தில் இருந்து ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே ஒரு டிராக்டரில் சிலர் மணல் கடத்தி வந்தனர். இதைக்கண்ட ஜெகதீஷ் துரை அந்த டிராக்டரை தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால் அந்த டிராக்டர் நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து அவர் டிராக்டரை பின்தொடர்ந்து சென்றார். பாண்டிச்சேரி என்ற கிராமம் அருகே காட்டுப்பகுதியில் டிராக்டர் ஆக்சில் முறிந்து நின்று விட்டது.

இதையடுத்து டிராக்டரில் இருந்து 3 பேர் தப்பி ஓட முயன்றனர். ஆனால் ஜெகதீஷ் துரை அவர்களை மடக்கிப்பிடித்தார். அப்போது தங்களை விடுவிக்குமாறு கூறி 3 பேரும் ஜெகதீஷ் துரையை மிரட்டினர். இதுதொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே அங்கே மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த மேலும் 3 பேர் வந்துள்ளனர்.

அவர்கள் சேர்ந்து ஜெகதீஷ் துரையை இரும்பு கம்பி மற்றும் ஸ்பேனரால் சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தாமரைக்குளத்தை சேர்ந்த டிராக்டர் உரிமையாளர் மாடசாமி மகன் முருகன் (25), அதே ஊரை சேர்ந்த உய்க்காட்டான் மகன் கிருஷ்ணன் (48), கல்மாணிக்கபுரத்தை சேர்ந்த மணல் புரோக்கர்கள் தங்கராஜ் மகன் மணிக்குமார் (24), முருகன் மகன் ராஜாரவி (25) மற்றும் 18 வயது பாலிடெக்னிக் மாணவர் ஒருவர் என மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதவிர கல்மாணிக்கபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் அமிதாப்பச்சன் (25) நெல்லை கோர்ட்டில் சரண் அடைந்தார்.

இதையடுத்து 6 பேரையும் போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு நெல்லை 4-வது கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் அரசு தரப்பில் 25 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று நீதிபதி கிளாட்சன் பிளசட் தாகூர் தீர்ப்பு கூறினார். அப்போது 6 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதில் முருகன், கிருஷ்ணன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் ஒரு பிரிவின் கீழ் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

மணிக்குமார், ராஜாரவி, அமிதாப்பச்சன் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் ஒரு பிரிவின் கீழ் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டது. இதில் பாலிடெக்னிக் மாணவர் மட்டும் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சிவலிங்கமுத்து ஆஜராகி வாதாடினார்.

இதையடுத்து குற்றவாளிகள் 5 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேனில் அழைத்துச் சென்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

நீதிபதி கிளாட்சன் பிளசட் தாகூர், 85 பக்கங்கள் கொண்ட தீர்ப்புரை வழங்கினார். அதில், ஒரு போலீஸ்காரர் தனது அரசு பணியை செய்யும்போது, தனது கடமையை செய்ய விடாமல் தடுத்ததோடு மட்டுமல்லாமல், போலீஸ் காரரையே இரும்பு கம்பி, ஸ்பேனரால் தாக்கி கொலை செய்து உள்ளனர். இதுபோன்ற குற்றங்களுக்கு குறைந்த தண்டனை வழங்க முடியாது. எனவே, ஆயுள் தண்டனை விதிப்பதாக கூறப்பட்டு உள்ளது.

ஜெகதீஷ் துரை கொலை செய்யப்பட்ட அன்று தகவல் கிடைத்த உடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் சம்பவ இடத்துக்கு சென்று கொலையாளிகளை உடனடியாக பிடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தார். ஜெகதீஷ் துரை உடலை இறுதிச்சடங்கிற்கு கொண்டு செல்லும்போது அவரும் தனது தோளில் சுமந்து சென்றார்.

மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு போலீஸ் துறை சார்பில் தேவையான ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்க செய்தார். இதுதவிர அரசு தரப்பில் வக்கீல் சிவலிங்கமுத்துவை சிறப்பு வக்கீலாக நியமிக்கவும் ஏற்பாடு செய்தார். இதன்மூலம் கொலை நடந்து 10 மாதங்களுக்குள் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. நேற்றும் தீர்ப்பு வெளியான நேரத்தில் அருண் சக்திகுமார் கோர்ட்டு வளாகத்துக்கு வந்திருந்தார்.

Next Story