மணப்பாறை அருகே விபத்தில் பலியான குட்டியின் அருகே பாசப்போராட்டம் நடத்திய குரங்குகள்


மணப்பாறை அருகே விபத்தில் பலியான குட்டியின் அருகே பாசப்போராட்டம் நடத்திய குரங்குகள்
x
தினத்தந்தி 19 Feb 2019 10:45 PM GMT (Updated: 19 Feb 2019 8:32 PM GMT)

குளித்தலை சாலையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே சாலையை கடக்க முயன்ற ஒரு குரங்கு குட்டியின் மீது வாகனம் மோதியது. இதில் அந்த குரங்கு அதே இடத்தில் துடிதுடித்து செத்தது.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆண்டவர் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் குரங்குகள் உள்ளன. இதேபோல் ஆண்டவர் கோவில் அருகே குளித்தலை செல்லும் சாலையின் ஓரங்களில் உள்ள புளிய மரங்களில் ஏராளமான குரங்குகள் காணப்படுகின்றன. இந்த குரங்குகளுக்கு போதிய அளவில் உணவு கிடைக்காததால், சாலையில் செல்வோர் வழங்கும் உணவுகளை அவை சாப்பிடுகின்றன. மேலும் அவ்வப்போது சாலையை கடந்து அங்கும், இங்குமாக சுற்றித்திரிகின்றன.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை குளித்தலை சாலையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே சாலையை கடக்க முயன்ற ஒரு குரங்கு குட்டியின் மீது வாகனம் மோதியது. இதில் அந்த குரங்கு அதே இடத்தில் துடிதுடித்து செத்தது. கல்லூரி மற்றும் அருகில் உள்ள பள்ளியில் இருந்து வந்த மாணவர்கள், அதை பார்த்து சாலையில் இறந்து கிடந்த குரங்கை சாலையோரமாக கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அங்கிருந்த குரங்கு கூட்டம், இறந்த குரங்கின் அருகே சென்றவர்களை ஆக்ரோஷமாக விரட்டின.

இருப்பினும் அடுத்தடுத்து வாகனங்கள் சாலையில் சென்றதால், குரங்கின் உடல் நசுங்கி விடும் என்பதை அறிந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து குரங்கு கூட்டத்தை விரட்டி, இறந்த குரங்கை சாலையோரத்தில் தூக்கி வைத்தனர். பின்னர் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், இறந்த குரங்கை ஒரு சாக்கில் எடுத்துக்கொண்டு, அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்றனர். கோவிலின் பின் பகுதியில் குழி தோண்டி, இறந்த குரங்கை மஞ்சள் துணியால் சுற்றி, குழிக்குள் வைத்தனர். பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் இறந்த குரங்கிற்கு பால் ஊற்றினர். பின்னர் குழி மூடப்பட்டது. இறந்த குரங்கு குட்டியின் அருகே பொதுமக்கள் உள்ளிட்டோரை நெருங்க விடாமல், குரங்குகள் நடத்திய பாசப்போராட்டம் அந்த வழியாக சென்றவர்களின் கண்களில் நீரை வரவழைத்தது. 

Next Story