அ.தி.மு.க.– பா.ஜனதா சந்தர்ப்பவாத கூட்டணி தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் பேட்டி
அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி என்பது சந்தர்ப்பவாத கூட்டணி என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் மோகன் குமாரமங்கலம் கூறினார்.
திருப்பூர்,
காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் மாவட்டம் சார்பில் இன்று (சனிக்கிழமை) திருப்பூர் ராயபுரம் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் குமரன் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநகர், மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் கந்தசாமி, திருப்பூர் தேர்தல் பொறுப்பாளர் சுப்பிரமணியம், மாநில பொதுக்குழு உறுப்பினர் வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கட்சியின் தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் மோகன் குமாரமங்கலம் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சி மீதும், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீதும் பல போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சென்றுள்ளார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் திருப்பூர் வருகைதர உள்ளார். மோடியின் 4 ஆண்டு மோசமான ஆட்சி குறித்தும் இந்த கூட்டத்தில் விளக்கி பேசுவார். இதில் ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியாளர்கள் என யாரும் இல்லை. ஆனால் ஜனநாயகம் அதிகமாக இருப்பதால் தான் கட்சியில் இருக்கும் ஒரு சில அதிருப்தி குறித்தும் வெளியே தெரியவருகிறது. ஆனால் தலைவர் அழகிரியை பற்றிய அதிருப்தி எதுவும் கட்சியில் இல்லை. ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நிச்சயம் தமிழகத்திற்கு வருவார்கள். அவர்களுக்கு அழைப்பும் விடுத்துள்ளோம். ஜி.எஸ்.டி. பணமதிப்பிழப்பு நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்து திருப்பூர் தொழில்துறை மற்றும் தொழிலாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். ஆனால், தமிழகம் வந்த மோடி திருப்பூர் தொழில் நசிவு குறித்து எதுவும் பேசவில்லை.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் திருப்பூர் பின்னலாடை தொழில் எந்த அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது மட்டுமின்றி, வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளது. காமராஜர் ஆட்சியை கொண்டுவருவதாக கூறுகிறார். தற்போதைய ஆட்சி காமராஜர் ஆட்சி என்று கூறினால் யாரும் அதை ஏற்று கொள்ள மாட்டார்கள். தமிழகத்திற்கு 4 ஆண்டுகளாக மோடி அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை. அறிவிக்கப்பட்ட திட்டங்கள் கூட நிலுவையில் இருந்து வருகிறது. அவருடைய வாக்குறுதிகளை பொதுமக்கள் நம்ப தயாராக இல்லை.
தேர்தலை அடிப்படையாக கொண்டே மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பணிகள் நிச்சயம் தொடங்கப்படாது. தேர்தலை முன்வைத்தே திட்டங்களை மத்திய அரசு அறிவிக்கிறது. விஜயகாந்தை கூட்டணி பேச்சு வார்த்தைக்காக திருநாவுக்கரசர் சந்திக்கவில்லை. விஜயகாந்தின் உடல்நிலை குறித்தே விசாரித்து வந்துள்ளார். கூட்டணி குறித்து உயர்மட்ட தலைவர்கள் முடிவு செய்வார்கள்.
அ.தி.மு.க., பா.ஜனதா கட்சி சந்தர்ப்பவாத கூட்டணியாக உள்ளது. பா.ஜனதாவை மட்டுமின்றி அ.தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து விட்டு, தற்போது கூட்டணி மூலம் நல்லாட்சி கொடுப்பதாக பா.ம.க.வினர் கூறுகின்றனர். ஆனால் இதை பா.ம.க.வினரே ஏற்றுக்கொள்ளவில்லை. எந்த கட்சிக்கு வாக்கு அளித்தாலும் அது பா.ஜனதா கட்சியின் தாமரை சின்னத்திற்கே பலம் பொருந்தியதாக மாற்றும். தேர்தலில் ஒவ்வொரு சூழலில் கூட்டணி முடிவெடுக்கப்படும். அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.