வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம், ஒரே நாளில் 11 ஆயிரம் பேர் விண்ணப்பம்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம், ஒரே நாளில் 11 ஆயிரம் பேர் விண்ணப்பம்
x
தினத்தந்தி 24 Feb 2019 11:00 PM GMT (Updated: 24 Feb 2019 7:29 PM GMT)

கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய நடந்த முகாமில் ஒரே நாளில் 11 ஆயிரத்து 65 பேர் விண்ணப்பம் கொடுத்தனர்.

கோவை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய நேற்றுமுன்தினமும், நேற்றும் 3 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. நேற்று முன்தினம் நடந்த முகாமில் ஒரே நாளில் 11 ஆயிரத்து 65 பேர் விண்ணப்பம் அளித்தனர். இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 8,689 பேர் படிவம்-6 கொடுத்தனர்.

புதிய வாக்காளர்களான பெயர் சேர்க்க 18 வயது பூர்த்தி அடைந்த 2,853 பேர் விண்ணப்பம் கொடுத்தனர். பெயர் திருத்தம் செய்ய 711 பேர் படிவம் 7-ம், திருத்தம் செய்ய 954 பேர் படிவம் 8-ம், ஒரே தொகுதிக்குள் திருத்தம் செய்ய 711 பேர் படிவம் 8-ஏ கொடுத்தனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் தான் அதிகபட்சமாக 1,400 பேர் புதிதாக பெயர் சேர்க்க படிவம்-6 கொடுத்தனர். குறைந்தபட்சமாக சிங்காநல்லூர் தொகுதியில் 600 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் கொடுத்தனர்.

இது தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6 கொடுக்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்து புதிதாக பெயர் சேர்ப்பவர்கள் பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றை கொண்டு வந்து படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம். அந்த படிவங்களை வாக்குச்சாவடி ஊழியர்கள் சரிபார்த்து வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பார்கள்.

கோவை மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாம்களில் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் பெயர்களை சேர்க்க படிவங்களை கொடுத்தனர். தங்களுடைய பெயர் வாக்ாகளர் பட்டியலில் பெயர் உள்ளதா? என்று சரிபார்த்துக் கொண்டனர். விண்ணப்பத்தில், இதற்கு முன்பு எந்த முகவரியில் குடியிருந்தார்கள், வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்களை தெளிவாக பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

படிவங்களை பெற்றுக் கொண்டதற்கான ரசீதும் உடனுக்குடன் கொடுக்கப்படுகிறது. நேரிடையாக மட்டுமல்லாமல் ஆன் லைன் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். திருத்தங்களும் செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story