தாராபுரத்தில் விடுதியில் தங்கியிருந்த பள்ளி மாணவி சாவில் மர்மம் - கலெக்டரிடம் மனு


தாராபுரத்தில் விடுதியில் தங்கியிருந்த பள்ளி மாணவி சாவில் மர்மம் - கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 25 Feb 2019 11:00 PM GMT (Updated: 25 Feb 2019 8:53 PM GMT)

விடுதியில் தங்கியிருந்த பள்ளி மாணவி சாவில் மர்மம் இருப்பதாகவும், இதற்கு உரிய விசாரணை நடத்தக்கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

திருப்பூர்,

தாராபுரத்தில் விடுதியில் தங்கியிருந்த பள்ளி மாணவி சாவில் மர்மம் இருப்பதாகவும், இதற்கு உரிய விசாரணை நடத்தக்கோரி மாணவியின் தந்தை மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் திருப்பூர் முருகம்பாளையம் சூர்யா கிருஷ்ணா நகரை சேர்ந்த குபேந்திரன் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள், பா.ஜனதா இளைஞர் அணி செயலாளர் காடேஸ்வரா தங்கராஜ் உள்பட 75-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்தனர். பின்னர் குபேந்திரன் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது மூத்த மகள் நவ்யா தாராபுரம் சி.எஸ்.ஐ. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தாள். கடந்த 9-ந் தேதி விடுதி அருகில் உள்ள கணினி அறையில் எனது மகள் நவ்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்கள். இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் எங்களுக்கு சரிவர எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. பள்ளி நிர்வாகமும், விடுதியின் காப்பாளர்களும் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவிக்கிறார்கள். எனது மகள் சாவில் மர்மம் உள்ளது. அவரை கொலை செய்துள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளியே கொண்டு வர சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பு சார்பில் அளித்த மனுவில், அலகுமலை ஆதிதிராவிட மக்கள் பொதுப்பயன்பாட்டில் இருந்து வந்த நத்தம் புறம்போக்கு நிலத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைத்துள்ள தீண்டாமை வேலி, கதவை முற்றிலும் அகற்றி மக்களின் பொதுப்பயன்பாட்டு உரிமையை மாவட்ட நிர்வாகம் பாதுகாக்க வேண்டும். அவினாசி திருமலைக்கவுண்டன்பாளையம் சமையலர் பாப்பாள் மீது தீண்டாமை கொடுமை நடந்து 7 மாதங்கள் ஆகிறது. இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. பாப்பாள் மீது வழக்கு தொடுத்த தலைமையாசிரியர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்பேத்கருக்கு திருப்பூர் அறிவொளி சாலையில் முழு உருவ சிலை அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.


Next Story