வாளால் வெட்டப்பட்டு படுகாயமடைந்த வாலிபர் சாவு கொலையாளிகளில் ஒருவர் கைது


வாளால் வெட்டப்பட்டு படுகாயமடைந்த வாலிபர் சாவு கொலையாளிகளில் ஒருவர் கைது
x
தினத்தந்தி 4 March 2019 11:06 PM GMT (Updated: 2019-03-05T04:36:46+05:30)

சாத்தூரில் வாளால் வெட்டப்பட்டதில் படுகாயமடைந்த வாலிபர் இறந்து போனார். இந்த கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சாத்தூர்,

சாத்தூர் படந்தாலை சேர்ந்தவர் முத்துபாண்டி(வயது35). ஆட்டோவை எரித்த பிரச்சினையில் இவருக்கும் அண்ணாநகர் ஓடைத்தெருவை சேர்ந்த முருகன் என்பவரது மகன்கள் மோகன்ராஜ் (35), செந்தில்குமார் (23), அஜீத்(22) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

ஆட்டோ எரிப்பு வழக்கில் கைதான முத்துபாண்டி ஜாமீனில் வெளியே வந்து சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியிலுள்ள பாரில் அமர்ந்து மதுகுடித்த போது முத்துபாண்டிக்கும் முருகனின் மகன்களுக்கும் இடையே மீண்டும் பிரச்சினை வெடித்தது. பாரை விட்டு வெளியே வந்தபோது வாசலில் நின்ற முத்துபாண்டியின் கண்களில் மிளகாய் பொடியை தூவி வாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்த முத்துபாண்டி மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார்.

மோகன்ராஜ், செந்தில்குமார், அஜீத் மற்றும் இவர்களது மைத்துனர் விக்னேஷ்வரன்(25) ஆகியோர் மீது சாத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் மோகன்ராஜ் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரையும் தேடிவருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட முத்துபாண்டிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். அவர் மீது சாத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் 5–க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவான நிலையில் அதில் 4 வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story