தனியார் மருத்துவமனை, கூட்டுறவு வங்கி கணக்குகளில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் ரூ.96 லட்சம் மோசடி


தனியார் மருத்துவமனை, கூட்டுறவு வங்கி கணக்குகளில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் ரூ.96 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 6 March 2019 4:15 AM IST (Updated: 6 March 2019 1:06 AM IST)
t-max-icont-min-icon

தனியார் மருத்துவமனை, கூட்டுறவு வங்கி கணக்குகளில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் ரூ.96 லட்சம் மோசடி செய்த கொல்கத்தா வாலிபர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை,

கோவை நஞ்சப்பா ரோட்டில் கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியின் உதவி பொதுமேலாளராக உமாமகேஸ்வரியும், மேலாளராக சந்திரசேகரனும் பணியாற்றி வருகிறார்கள். இந்த வங்கியின் 2 கணக்குகள் கோவை அவினாசி ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் நடப்பு கணக்காக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த வங்கி கணக்குகளை நெட்பேங்கிங் முறையில் இயக்க உதவி பொது மேலாளர் உமாமகேஸ்வரிக்கும், மேலாளர் சந்திரசேகரனுக்கும் அங்கீகாரம் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த வங்கி கணக்கில் இருந்து ஜனவரி மாதம் 5-ந் தேதி ரூ.80 லட்சத்து 50 ஆயிரம் கொல்கத்தாவில் உள்ள பல்வேறு வங்கிகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டது. ஆனால் இது பற்றிய விவரம் சந்திரசேகரனுக்கு தெரிய வில்லை.

விசாரணையில், சந்திரசேகரனின் செல்போனை செயல் இழக்கச்செய்து விட்டு, போலியான ஆவணங்கள் மூலம் அதே எண்ணுக்கு வேறு ஒரு சிம்கார்டு வாங்கப்பட்டு உள்ளது. பின்னர் அந்த எண்ணை வைத்து நெட்பேங்கிங் முறையில் கொல்கத்தாவில் உள்ள வங்கிகளுக்கு பண பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரசேகரன் கோவை நகர சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

இதேபோல் கோவை சிங்காநல்லூரில் தனியார் மருத்துவமனை ஒன்றின் வங்கி கணக்கில் இருந்தும் பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் டாக்டர் ஜெகநாதன். இவருடைய மனைவி பார்வதி. இவர்கள் கோவை ராமநாதபுரத்தில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார்கள். மருத்துவமனைக்கு சொந்தமான வங்கி கணக்கு கோவை திருச்சி ரோட்டில் உள்ள ஒரு வங்கியில் இருந்தது. அந்த வங்கிகணக்கிற்கு பார்வதியின் செல்போன் எண், நெட்பேங்கிங் முறைக்கு கொடுக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் பார்வதியின் செல்போன் எண்ணை செயலிழக்க செய்து ரூ.15 லட்சத்து 37 ஆயிரத்தை கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் மோசடி ஆசாமிகள் தங்களது வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்து மோசடி செய்துள்ளனர். இதுகுறித்தும் கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் தெலுங்கானா மாநிலத்தில் இதே போல நடைபெற்ற மோசடி தொடர்பாக சைபராபாத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொல்கத்தாவை சேர்ந்த அன்கன்ஷா, சந்தோஷ்பானர்ஜி, ரஜத்குண்டு, சந்தன் வர்மா, நைஜீரியா நாட்டை சேர்ந்த ஓடோஷ் ஹென்றி ஆகிய 5 பேரை கைது செய்தனர். விசாரணையில், அவர்களுக்கு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் கூட்டுறவு வங்கி கணக்குகளில் இருந்து போலி ஆவணம் மூலம் ரூ.95 லட்சத்து 87 ஆயிரம் மோசடி செய்ததில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்த கும்பலுக்கு நஜீரியாவை சேர்ந்த ஜேம்ஸ் தலைவனாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அவர் நைஜீரியாவில் பதுங்கி உள்ளார். ஆன்லைன் முறையில் ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு பரிமாற்றம் செய்வதில் கைதேர்ந்தவரான இவர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இதுபோன்று மோசடி செய்துள்ளதாக தெரிகிறது. ஜேம்ஸ் தலைமையில் இரு குழுக்களாக மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை கூட்டுறவு வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மோசடி செய்ததில் அன்கன்ஷா, சந்தோஷ் பானர்ஜி, ஓடோஷ் ஹென்றி ஆகியோருக்கும், தனியார் மருத்துவமனை வங்கிகணக்கில் நடைபெற்ற மோசடியில் ரஜத்குண்டு, சந்தன்வர்மா ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் சென்னையிலும் இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது.

தெலுங்கானாவில் கைதான 5 பேரையும், கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து கோவை கொண்டு வந்து கோவை சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள் 5 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சைபர் கிரைம் போலீஸ் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அவர்களை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story