ஏ.டி.எம். எந்திரத்தில் கேட்பாரற்று இருந்த ரூ.29 ஆயிரம் போலீசில் ஒப்படைப்பு


ஏ.டி.எம். எந்திரத்தில் கேட்பாரற்று இருந்த ரூ.29 ஆயிரம் போலீசில் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 7 March 2019 4:15 AM IST (Updated: 7 March 2019 3:05 AM IST)
t-max-icont-min-icon

ஏ.டி.எம். எந்திரத்தில் கேட்பாரற்று இருந்த ரூ.29 ஆயிரத்தை எடுத்த பெண் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே அணுக்கோடு கைதறத்தலை வீடு பகுதியை சேர்ந்தவர் குமாரிகலா. இவர் உலக ஐக்கிய மனித பாதுகாப்பு கழக குமரி மாவட்ட மகளிரணி துணை தலைவியாக உள்ளார். நேற்று முன் தினம் மதியம் நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார்.

அந்த மையத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வரும் பகுதியில் பணம் வெளியில் வந்த நிலையில் கேட்பாரற்று இருந்தது. அந்த பணத்தை குமரிகலா எடுத்து எண்ணினார். அதில் மொத்தம் ரூ.29 ஆயிரம் இருந்தது. அருகில் யாரும் இல்லை.

இதையடுத்து அந்த பணத்தை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க முடிவு செய்தார். அதன்படி அவர் உலக ஐக்கிய மனித பாதுகாப்பு கழக மாவட்ட தலைவர் சத்தியசீலன், செயலாளர் ஜான்சேகர், பொருளாளர் அருணாச்சலம் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

அங்கிருந்த அதிகாரிகள், அந்த பணத்தை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு கூறினர். இதையடுத்து அவர்கள் நாகர்கோவில் கோட்டார் போலீசில் ஒப்படைத்தனர். ஏ.டி.எம்.மில் கேட்பாரற்று இருந்த பணத்தை எடுத்து நேர்மையாக போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த குமாரிகலாவின் நடவடிக்கையை அனைவரும் பாராட்டினர்.

சம்பந்தப்பட்ட ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வந்த நபர், கார்டை சொருகியதும், பணம் வருவதற்கு தாமதமாகி இருக்கலாம், இதனால் அந்த நபர், ஏ.டி.எம்.மில் பணம் இல்லை என்று நினைத்து திரும்பி சென்றிருக்கலாம் என்று தெரிகிறது. சிறிது நேரத்தில் வந்த பணம் உள்ளே செல்லாமல், அங்கேயே இருந்திருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் அந்த பணம் யாருடையது? என்பது குறித்து விசாரித்து உரியவரிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Next Story