விவசாயியிடம் லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியான விவகாரம்: கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம் சப்–கலெக்டர் நடவடிக்கை


விவசாயியிடம் லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியான விவகாரம்: கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம் சப்–கலெக்டர் நடவடிக்கை
x
தினத்தந்தி 6 March 2019 10:30 PM GMT (Updated: 6 March 2019 10:10 PM GMT)

விவசாயி ஒருவரிடம், கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான விவகாரம் தொடர்பாக அந்த கிராம நிர்வாக அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து சப்–கலெக்டர் (பொறுப்பு) சக்திவேல் உத்தரவிட்டுள்ளார்.

ஊத்துக்குளி,

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள கூனம்பட்டி கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தவர் நடராஜன். இவர், மத்திய அரசின் திட்டத்தின் பயன் அடைய விண்ணப்பித்த விவசாயி ஒருவரிடம், லஞ்சம் வாங்குவதுபோன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

இந்த சம்பவம் தொடர்பாக ஊத்துக்குளி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் (பொறுப்பு) வெங்கடலட்சுமி, கூனம்பட்டிக்கு சென்று பொதுமக்களிடமும், விவசாயிகளிடமும் விசாரணை நடத்தினார். பின்னர் தொடர்புடைய கிராம நிர்வாக அதிகாரி நடராஜனிடமும் விசாரணை மேற்கொண்டார். அதை தொடர்ந்து இது தொடர்பான அறிக்கையை சப்–கலெக்டருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து நடராஜன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

இதையடுத்து கிராம நிர்வாக அதிகாரி நடராஜனை பணியிடை நீக்கம் செய்து, சப்–கலெக்டர்( பொறுப்பு) சக்திவேல் உத்தரவிட்டார். விவசாயி ஒருவரிடம், லஞ்சம் வாங்குவதுபோன்ற வீடியோவால் கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பது ஊத்துக்குளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story