நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை ஆலோசனை கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை ஆலோசனை கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 12 March 2019 4:15 AM IST (Updated: 11 March 2019 10:35 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பொறுப்பு அலுவலர்கள், பறக்கும் படை, கண்காணிப்பு குழு அலுவலர்களுக்கு ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

தேனி,

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்கும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 18-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் வருகிற 19-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை நடக்கிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை 27-ந்தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற 29-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

இந்த தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் தேர்தல் பொறுப்பு அலுவலர் கள், பறக்கும் படை, கண்காணிப்பு குழு மற்றும் வீடியோ கண்காணிப்பு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசும் போது கூறியதாவது:-

தேர்தலின் போது வாக்காளர்கள் வாக்களிக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தலில் கட்டாயம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகள் தடுக்கப்படும். எவ்வித புகார்களுக்கும் இடம் அளிக் காத வகையில் தேர்தல் அலுவலர்கள் பணியாற்ற வேண்டும்.

தேர்தல் பொறுப்பு அலுவலர்கள் தேர்தல் பணி தொடக் கம் முதல் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை எவ்வித குறைபாடுகளும் இன்றி சிறப்பான முறையில் பணியாற்றிட வேண்டும். பறக்கும் படையினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாகனத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படும்.

நிலைக் கண்காணிப்பு குழு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதியில் வரும் வாகனங்களை பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி, அச்சுறுத்தாத வண்ணம், எளிய முறையில் சோதனை மேற்கொள்ள வேண்டும். வீடியோ கண்காணிப்பு குழுவினர் அரசியல் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நடத்தும் கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் பிரசாரங்களை ஒளிப்பதிவு செய்து குறுந்தகடுகளை தினந்தோறும் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, உதவி கலெக்டர் (பயிற்சி) தினேஷ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story