விபத்தில் தொழிலாளி சாவு: காரணமானவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகை


விபத்தில் தொழிலாளி சாவு: காரணமானவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 15 March 2019 3:30 AM IST (Updated: 15 March 2019 12:03 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் தொழிலாளி இறந்ததற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகை யிடப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த புதூர் கிராமம் மாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50). கட்டிட தொழிலாளியான இவருக்கு சாலம்மாள்(43) என்கிற மனைவியும், முரளி (27) என்ற மகனும் சுஷ்மிதா(22) என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 7-ந் தேதியன்று ராஜேந்திரன் வேலைக்கு சென்றுவிட்டு பஸ் மூலம் புதூருக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து தன்னுடைய வீட்டுக்கு சாலையோரம் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து கனகம்மாசத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. விபத்து நடந்து ஒரு வாரம் ஆகியும் போலீசார் இது நாள் வரையிலும் குற்றவாளியை கைது செய்யவில்ல்ை-.

இதனால் பாதிக்கப்பட்ட புதூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வக்கீல் மகேஷ் தலைமையில் திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு ராஜேந்திரன் இறப்புக்கு காரணமான வாகன ஓட்டியை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், புதூர் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் மேலும் விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்க அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும், அனைத்து பஸ்களும் புதூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை போலீஸ் சூப்பிரண்டு பொன்னியிடம் அளித்தனர். அதை பெற்றுக்கொண்ட அவர் தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story