பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் இறங்குவதற்காக இடம் பிடித்து காத்திருக்கும் பக்தர்கள்


பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் இறங்குவதற்காக இடம் பிடித்து காத்திருக்கும் பக்தர்கள்
x
தினத்தந்தி 17 March 2019 4:15 AM IST (Updated: 17 March 2019 1:31 AM IST)
t-max-icont-min-icon

பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் இறங்குவதற்காக இடம் பிடித்து பக்தர்கள் காத்திருக்கிறார்கள்.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் விழா கடந்த 4-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து பண்ணாரி அம்மன் சப்பரம் பல்வேறு கிராமங்கள் வழியாக வீதி உலா சென்றது. இந்த சப்பரம் 12-ந் தேதி கோவிலை அடைந்தது. பின்னர் நள்ளிரவில் குழிக்கம்பம் நடப்பட்டது. இந்த கம்பத்தை சுற்றி 13-ந் தேதி முதல் நேற்று வரை இரவு 7 மணி அளவில் பக்தர்கள் ஆடிவந்தார்கள். 18-ந் தேதி இரவு 1 மணிக்கு அம்மை அழைத்தல் நடக்கிறது.

அதன்பின்னர் 19-ந் தேதி அதிகாலை 4 மணி அளவில் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். இவர்களின் வசதிக்காக கோவிலில் பிரமாண்டமான தகரத்தால் ஆன பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

பக்தர்கள் தீ மிதிக்கும்போது ஒருவருக்கொருவர் முண்டியடித்து கொண்டு செல்வதை தவிர்க்க 10-க்கும் மேற்பட்ட தடுப்புகள் வரிசையாக அமைத்துள்ளனர். குண்டம் இறங்க இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து இந்த தடுப்புகளில் வரிசையாக உட்கார்ந்து இடம் பிடித்து காத்திருக்கிறார்கள். இதற்காக மஞ்சள் துண்டை வரிசையில் போட்டு உள்ளார்கள். கழிப்பறை, சாப்பிட மற்றும் குளிக்க செல்லும்போது வரிசையில் தனக்கு பதிலாக ஒருவரை உட்கார வைத்துவிட்டு செல்கிறார்கள்.

மேலும் தீ மிதிப்பதற்காக தங்கள் நிலத்தில் உள்ள ஊஞ்சமரம், வேம்பு மரங்களை வெட்டி வேன்களில் ஏற்றி கோவிலுக்கு எடுத்து வந்து குண்டம் இருக்கும் பகுதியில் இறக்கி வைத்துள்ளார்கள். இதனால் கோவில் முன்பு விறகுகள் குவிக்கப்பட்டு உள்ளன. கோவிலுக்கு செல்லும் வழியில் கடைகள் வைக்கப்பட்டு உள்ளன. இங்கு பூஜைக்கு தேவையான பொருட்கள் மற்றும் வெப்பத்தை தணிக்கும் தர்ப்பூசணி, வெள்ளரி பிஞ்சு வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள்.

பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நடைபயணமாக கோவிலுக்கு வந்து ஆடிப்பாடுகிறார்கள்.

Next Story