சிதம்பரம் பகுதியில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் சப்-கலெக்டர் தகவல்
சிதம்பரம் பகுதியில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று அனைத்து கட்சியினர் கூட்டத்தில் சப்-கலெக்டர் விசுமகாஜன் தெரிவித்தார்.
சிதம்பரம்,
தேர்தலின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அனைத்து கட்சியினருக்கான ஆலோசனை கூட்டம் சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை, நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டர் விசுமகாஜன் தலைமை தாங்கினார். தாசில்தார் ஹரிதாஸ், சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சப்-கலெக்டர் விசுமகாஜன் பேசுகையில், சிதம்பரம் பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகள் உள்பட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என்று அனைவரும் ‘சி விஜில்’ ( cVIGIL ) என்கிற செயலி மூலமாக உடனுக்குடன் புகார் தெரிவிக்கலாம். அந்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், சம்பந்தப்பட்டவர்களுக்கு பதில் அளிக்கப்படும்.
உங்கள் பகுதியில் பணப்பட்டுவாடா இருப்பதாக தகவல் தெரிவித்தால் அந்தந்த பகுதிகளுக்கு பறக்கும் படையினர் உடனடியாக அனுப்பி வைக்கப்படுவார்கள். மேலும் பேனர், கட் அவுட் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அரசியில் கட்சியினர் இதை பயன்படுத்த வேண்டாம்.
அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளை மறைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி சிலைகள் மறைக்கப்பட்டு வருகிறது. மேலும் சில இடங்களில் அரசியல் கட்சி சுவர் விளம்பரங்கள் இன்னும் அழிக்கப்படாமல் உள்ளது. அவைகளை அழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.மேலும் தேர்தல் பிரசாரத்திற்காக தலைவர்களின் வருகையின்போது நாங்கள் அனுமதி கொடுக்கும் தூரம் வரையில் தான் கட்சி கொடிகள், தோரணங்களை கட்ட வேண்டும் என்று அவர் பேசினார்.
இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் தமிமுன்அன்சாரி, தே.மு.தி.க. நகர பொருளாளர் கணேசன், அ.தி.மு.க. கருப்பு ராஜா, பரங்கிபேட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளர் பெருமாள், விவசாய சங்கம் வி.எம்.சேகர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story