பிற சமுதாயத்தை அவமதிக்கும் வகையில் சுவரொட்டி அச்சிடக்கூடாது தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் உதவி கலெக்டர் எச்சரிக்கை


பிற சமுதாயத்தை அவமதிக்கும் வகையில் சுவரொட்டி அச்சிடக்கூடாது தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் உதவி கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 16 March 2019 10:00 PM GMT (Updated: 16 March 2019 10:34 PM GMT)

அச்சகங்களில் பிற சமுதாயத்தை அவமதிக்கும் வகையில் சுவரொட்டி அச்சிடக்கூடாது என்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அமுதா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

கோவில்பட்டி, 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்தது.

கோவில்பட்டி உதவி கலெக்டர் அமுதா தலைமை தாங்கினார். தாசில்தார் பரமசிவம், வருவாய் ஆய்வாளர் மோகன், கிராம நிர்வாக அலுவலர் அபிராமசுந்தரி மற்றும் திருமண மண்டப உரிமையாளர்கள், அச்சக உரிமையாளர்கள், நகை அடகு கடைக்காரர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உதவி கலெக்டர் அமுதா பேசியதாவது:-

வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. எனவே எந்தவொரு திருமண மண்டபத்திலும் அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் நடத்துவதற்கு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும்.

தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெறாமல் எந்த கூட்டத்தையும் திருமண மண்டபங்களில் நடத்த கூடாது.

அச்சகங்களில் பிற சமுதாயத்தையோ, தலைவர்களையோ அவமதிக்கும் வகையில், வாசகம் எழுதிய சுவரொட்டி அச்சிடக் கூடாது. ஒவ்வொரு சுவரொட்டியின் அடியிலும், அது அச்சடிக்கப்பட்ட அச்சகத்தின் முகவரி, தொலைபேசி எண் கண்டிப்பாக இடம்பெற வேண்டும்.

நகை அடகு கடையில் ரூ.1 லட்சத்துக்கு அதிகமாக யாருக்கும் நகை அடமான கடன் வழங்க கூடாது. ரூ.1 லட்சத்துக்கு அதிகமாக நகை கடன் வழங்கினால் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story