தேர்தல் அதிகாரிகள் கட்டுப்பாடு விதித்ததால் ஜல்லிக்கட்டில் பரிசுகள் கிடைக்காமல் வீரர்கள், காளை உரிமையாளர்கள் ஏமாற்றம்


தேர்தல் அதிகாரிகள் கட்டுப்பாடு விதித்ததால் ஜல்லிக்கட்டில் பரிசுகள் கிடைக்காமல் வீரர்கள், காளை உரிமையாளர்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 17 March 2019 11:00 PM GMT (Updated: 17 March 2019 8:24 PM GMT)

லால்குடியை அடுத்த அன்பில் பகுதியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் தேர்தல் அதிகாரிகள் கட்டுப்பாடு விதித்ததால் பரிசுகள் கிடைக்காமல் வீரர்களும், காளை உரிமையாளர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

லால்குடி,

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த அன்பில் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழாவும், அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டும் நடத்தப்படுவது வழக்கம். வழக்கம்போல இந்த ஆண்டும் பூச்சொரிதல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக மாவட்ட நிர்வாகம் அனுமதியின்பேரில் அன்பில் பகுதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தது.

இதனை தொடர்ந்து நேற்று காலை ஜல்லிக்கட்டு தொடங்கியது. லால்குடி தாசில்தார் சத்தியபால கங்காதரன் முன்னிலையில், ஆர்.டி.ஓ.பாலாஜி ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் மற்றும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநில கவுரவ தலைவரும், இலங்கை அமைச்சருமான செந்தில் தொண்டைமான், திருவெறும்பூர் எம்.எல்.ஏ. மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக காளைகளையும், வீரர்களையும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். 254 வீரர்கள் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். முதலில் கோவில் காளைகளும் அதைத்தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக பிற காளைகளுடன் அவிழ்த்து விடப்படடன. இதில் திண்டுக்கல், மதுரை, அரியலூர், பெரம்பலூர், துறையூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி என பல்வேறு பகுதிகளில் இருந்த 564 காளைகள் கலந்து கொண்டன.சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 9 பேர்் காயம் அடைந்தனர். இதில் மலையாளபட்டி கிராமத்தை சேர்ந்த காளையின் உரிமையாளரோடு வந்த முருகேசன்(21) மற்றும் வாளவந்தான்கோட்டை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (27) ஆகியோர் தலையிலும், வயிற்றிலும் முட்டியதால் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு வாடிவாசல் அருகே அமைக்கப்பட்டிருந்த இடத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், மொபட், சில்வர் குடம், தங்க, வெள்ளி காசுகள் என்று சுமார் ரூ.5 லட்சத்துக்கு மேல் பரிசுகள் வழங்குவதற்கு விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆனால், தற்போது நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிகளின்படி ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசுகள் வழங்க கூடாது என்று தேர்தல் அதிகாரிகள் கட்டுப்பாடு விதித்தனர். இதனால், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்திய விழா குழுவினரால் பரிசுகள் வழங்க முடியவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Next Story