மராட்டியத்தில் முதல்கட்ட தேர்தல் 7 நாடாளுமன்ற தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம் 25-ந் தேதி கடைசி நாள்


மராட்டியத்தில் முதல்கட்ட தேர்தல் 7 நாடாளுமன்ற தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம் 25-ந் தேதி கடைசி நாள்
x
தினத்தந்தி 17 March 2019 11:13 PM GMT (Updated: 17 March 2019 11:13 PM GMT)

மராட்டியத்தில் முதல் கட்டமாக தேர்தல் நடைபெறும் 7 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 25-ந் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும்.

மும்பை,

நாடாளுமன்ற தேர்தல் மராட்டியத்தில் 4 கட்டமாக நடைபெற உள்ளது.
அடுத்த மாதம் (ஏப்ரல்) 11, 18, 23, 29 ஆகிய தேதிகளில் இந்த தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்டமாக ஏப்ரல் 11-ந் தேதி 7 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

அதன்படி வார்தா, ராம்டெக், நாக்பூர், பண்டாரா-கோண்டியா, கட்சிரோலி-சிமூர், சந்திராப்பூர், யவத்மால்-வாசிம் ஆகியவை முதல்கட்டமாக தேர்தல் களத்தை சந்திக்கும் தொகுதிகளாகும்.

இந்த முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

மனுதாக்கலுக்கான கடைசி நாள் வருகிற 25-ந் தேதி ஆகும். மறுநாள் (26-ந் தேதி) வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் 28-ந் தேதி என அறிவிக்கப்பட்டு உள்ளது.

முதல்கட்டமாக தேர்தலை சந்திக்கும் கட்சிரோலி நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த தொகுதியாகும். எனவே அந்த தொகுதியில் தேர்தல் பாதுகாப்புக்காக துணை ராணுவத்தினர் அதிக அளவில் வரவழைக்கப்பட்டு உள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்யும் தேர்தல் அதிகாரிகள் அலுவலகங்கள் முன்பும் போலீசாருடன் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

நாக்பூர் தொகுதி வி.ஐ.பி. தொகுதியாக கருதப்படுகிறது. அந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி நிதின் கட்காரி போட்டியிடுகிறார். பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த நானா படோலே நிதின் கட்காரியை எதிர்த்து களம் காண்கிறார். இதனால் நாக்பூர் தொகுதியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

மராட்டியம் உள்பட நாடு முழுவதும் 91 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக ஏப்ரல் 11-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.

அதன்படி மராட்டியம் (7), ஆந்திரா (25), அருணாசல பிரதேசம் (2), அசாம் (5), பீகார் (4), சத்தீ‌‌ஷ்கார் (1), கா‌‌ஷ்மீர் (2), மணிப்பூர் (1), மேகாலயா (2), மிசோரம் (1), நாகாலாந்து (1), ஒடிசா (4), சிக்கிம் (1), தெலுங்கானா (17), திரிபுரா (1), உத்தரபிரதேசம் (8), உத்தரகாண்ட் (5), மேற்கு வங்காளம் (2), அந்தமான் (1), லட்சத்தீவு (1) ஆகிய 20 மாநிலங்களை சேர்ந்த தொகுதிகளுக்கு இந்த தேர்தல் நடக்கிறது.

நாடு முழுவதும் பரந்து கிடக்கும் இந்த தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான தீவிர முயற்சிகளை தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் மேற்கொண்டு வருகின்றன. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு வருவதால், வருகிற நாட்களில் பிரசாரம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதற்கட்ட தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் கமி‌‌ஷன் தீவிரப்படுத்தி இருக்கிறது.

மராட்டியத்தில் 48 தொகுதிகள் உள்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நிறைவு பெற்று மே 23-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Next Story