அரசு கொள்முதல் நிலையத்தில் நெல்லுக்கு குறைந்த விலை நிர்ணயம் - விவசாயிகள் புகார்
கம்பத்தில் உள்ள அரசு கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளுக்கு குறைந்த விலை நிர்ணயம் செய்வதாக விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.
கம்பம்,
தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை ஆண்டுதோறும் சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு பருவமழை கை கொடுத்ததால் முதல்போக சாகுபடி அறுவடை நல்லபடியாக முடிந்தன. இதனை தொடர்ந்து முல் லைப்பெரியாறு அணையில் நீர் போதுமானதாக இருந்ததால் கடந்த நவம்பர் மாதம் 2-ம்போக சாகுபடி தொடங்கியது. இந்த ஆண்டு தட்பவெப்ப சூழ்நிலை மாற்றத்தால் மகசூல் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும், உடனடியாக பணப்பட்டுவாடா கிடைக்கும் வகையில் கொள்முதல் நிலையம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் கம்பத்தில் சுருளிப்பட்டி சாலையில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தில் 40 கிலோ எடை கொண்ட நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.734 விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. நெல் மூட்டைக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர்.
ஆனால் கொள்முதல் நிலையத்தில் குறைந்த விலையை நிர்ணயம் செய்வதாக விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.
இதனால் கொள்முதல் நிலையம் திறந்து 2 நாட்களாகியும் நெல்லை விற்பதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. நெல்லை விற்பனைக்கு கொண்டு வராமல் கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் புறக்கணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story