காவேரிப்பட்டணம் அருகே போலி சாமியார் வீட்டை சூறையாடிய பொதுமக்கள்


காவேரிப்பட்டணம் அருகே போலி சாமியார் வீட்டை சூறையாடிய பொதுமக்கள்
x
தினத்தந்தி 18 March 2019 11:00 PM GMT (Updated: 18 March 2019 4:25 PM GMT)

காவேரிப்பட்டணம் அருகே போலி சாமியார் வீட்டை பொதுமக்கள் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள சின்னமுத்தூர் கம்பளிக்கான் தெருவை சேர்ந்தவர் டான் (வயது 50). பெங்களூரை சேர்ந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதியில் குறி சொல்வது, மந்திரம் சொல்வது போன்றவற்றில் ஈடுபட்டு வந்தார். பகலில் தையல் தொழிலாளியாகவும், இரவு சாமியாராகவும் இருந்து வந்தார். கடந்த 10-ந் தேதி இரவு அமாவாசை தினத்தன்று அவரது வீட்டில் யாகம் வளர்த்து பூஜை செய்தார். அந்த நேரம் தீயை அணைக்காமல் விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதில் தீ பரவி வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்தன. அப்போது வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்தது. தீயை அணைக்க சென்ற அதே பகுதியை சேர்ந்த காவேரி(50), சவுந்தர்(23), முனியப்பன்(28) ஆகிய 3 பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

இதில் காவேரி மற்றும் சவுந்தர் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். முனியப்பனை வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் முனியப்பன் பரிதாபமாக இறந்தார். இந்த நிலையில் முனியப்பன் சாவிற்கு காரணமாக இருந்த போலி சாமியாரை கைது செய்யக்கோரி, நேற்று முன்தினம் மாலை கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை அந்த கிராம மக்கள் போலி சாமியார் வீட்டை உடைத்து சூறையாடினர். மேலும் வீட்டில் இருந்த மந்திரத்திற்கு பயன்படுத்திய சிலைகள், பூஜை பொருட்கள் உள்ளிட்டவைகளை எடுத்து வெளியே வீசினார்கள். அப்போது கைத்துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் அங்கு சென்று அந்த கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி போலி சாமியார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Next Story