10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் முற்றுகை
10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நேற்று காலை தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.
இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் வீரப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பாஸ்கர், அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
1.10.17 முதல் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் வழங்க வேண்டும், 3 ஆண்டு பணி முடித்த துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தூய்மை காவலர்களுக்கு துப்புரவு பணியாளர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாநில பொருளாளர் ஜெய்கணேஷ், துணைத்தலைவர் சரவணன், கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் சங்க மாவட்ட பொருளாளர் டெல்லி அப்பாத்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர். உடனே விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story