பண்ருட்டி அருகே தேர்தல் பறக்கும் படையினர் சென்ற வாகனம் மீது பஸ் மோதல் தாசில்தார் உள்பட 7 பேர் காயம்


பண்ருட்டி அருகே தேர்தல் பறக்கும் படையினர் சென்ற வாகனம் மீது பஸ் மோதல் தாசில்தார் உள்பட 7 பேர் காயம்
x
தினத்தந்தி 19 March 2019 4:30 AM IST (Updated: 19 March 2019 1:23 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே தேர்தல் பறக்கும் படையினர் சென்ற வாகனம் மீது பஸ் மோதியது. இதில் அந்த வாகனத்தில் பயணம் செய்த தாசில்தார் உள்பட 7 பேர் காயமடைந்தனர்.

பண்ருட்டி, 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடைபெறுகிறது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யும் வகையில், பணம், பரிசுபொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்று கண்காணித்திட தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பண்ருட்டியை அருகே முத்தாண்டிக்குப்பம் பகுதியில் பறக்கும் படை தாசில்தார் ஜெயக்குமார் (வயது 43) தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் (56) மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

பின்னர் அங்கிருந்து தங்களது வாகனத்தில் நள்ளிரவு 1.30 மணிக்கு பண்ருட்டி நோக்கி வந்தனர். அவர்கள் காடாம்புலியூர் தாமரைக்குளம் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது இவர்களுக்கு பின்னால் கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று வந்தது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ், தாறுமாறாக ஓடி பறக்கும் படை அதிகாரிகள் சென்ற வாகனத்தின் பின்னால் மோதி நின்றது.

இதில் அதிகாரிகள் சென்ற வாகனத்தின் பின்பகுதி சேதமடைந்தது. மேலும் அதில் பயணம் செய்த பறக்கும் படை அதிகாரியான தாசில்தார் ஜெயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல், ஏட்டுகள் சரவணன், ஆனந்தபாபு, போட்டோ கிராபர் சார்லஸ் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்விழி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, விபத்தில் சிக்கி காயமடைந்த 7 பேரையும் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story