கலவை அரசு மருத்துவமனை அருகே பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை வீச்சு
கலவை அரசு மருத்துவமனை அருகே பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை வீசி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை,
வேலூர் மாவட்டம், கலவையில் அரசு மருத்துவமனை உள்ளது. நேற்று காலை இந்த மருத்துவமனையின் சவக்கிடங்கு அருகில் நாய்கள் குரைத்த படியும், காகங்கள் கரைந்தபடி இருந்தன. மேலும் பிறந்த குழந்தையின் அழுகுரலும் கேட்டது.
உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் அங்கு சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை தொப்புள் கொடி கூட சரியாக அறுக்கப்படாத நிலையில் கிடந்தது. மேலும் குழந்தையின் உடலில் எறும்புகள் ஊர்ந்த நிலையில் கிடப்பதும் தெரிய வந்தது.
தகவல் அறிந்த கலவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் சதீஷ்குமார், நந்தினி மற்றும் நர்சுகள் குழந்தையை மீட்டு உரிய சிகிச்சைகள் அளித்தனர். பின்னர் தொடர் சிகிச்சைக்காக அந்த குழந்தை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து கலவை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் குழந்தையை வீசி சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
யாராவது மருத்துவமனை பகுதிக்கு வந்து குழந்தை பெற்று விட்டு இங்கேயே விட்டு சென்று விட்டார்களா? அல்லது வேறு எங்காவது பிறந்த குழந்தையை கொண்டு வந்து இங்கு போட்டு விட்டு சென்றார்களா? என்பது உள்பட பல்வேறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story