ஏழை மாணவ–மாணவிகளுக்கு வீட்டுக்கே சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்
ஏழை மாணவ–மாணவிகளுக்கு அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் வீட்டுக்கே சென்று பாடம் நடத்துகிறார்.
அம்மாபேட்டை,
அம்மாபேட்டை அருகே உள்ள குப்பிச்சிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் பரமேஸ்வரன். இவர் பள்ளியில் 6–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரை தமிழ் பாடம் எடுத்து வருகிறார்.
பரமேஸ்வரன் வழக்கமாக பள்ளி முடிந்ததும் அந்த பகுதியில் உள்ள ஏழை மாணவ–மாணவிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை பாடம் நடத்துகிறார்.
இதுபற்றி ஆசிரியர் பரமேஸ்வரன் கூறும்போது, ‘எனது சொந்த ஊர் சேலம் மாவட்டம் மேச்சேரி. வறுமை காரணமாக அஞ்சல் வழி கல்வியிலேயே எம்.ஏ. படித்து முடித்தேன். அதன்பின்னர் மேலும் படித்து அரசு பள்ளி ஆசிரியர் ஆனேன்.
நான் வேலை பார்க்கும் குப்பிச்சிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள குட்டை முனியப்பன் கோவில், ஏமம்பாளையம், சேவண்டியூர், கண்ணாங்கரடு பகுதியில் 51 மாணவர்கள் 10–ம் வகுப்பு படிக்கிறார்கள்.
தற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால், ‘ட்யூசன் செல்ல வசதியில்லாத ஏழை மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் சொல்லித்தருகிறேன். சில நேரங்களில் மின்விளக்கு வசதி இல்லாத வீடுகளில் மாணவர்களை ஒரு பொதுவான இடத்துக்கு அழைத்து சென்று பாடம் நடத்துகிறேன்‘ என்றார்.
ஆசிரியர் பரமேஸ்வரன் எங்கள் மீது அக்கறை கொண்டு வீட்டுக்கே வந்து பாடம் சொல்லிக்கொடுக்கிறார். இதனால் எங்களுக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகிறது என்று அந்த பகுதி மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.