பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் செய்ய முயற்சி


பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் செய்ய முயற்சி
x
தினத்தந்தி 18 March 2019 10:30 PM GMT (Updated: 18 March 2019 10:11 PM GMT)

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து தவளக்குப்பத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

பாகூர்,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளிடம் நட்பாக பழகி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், சமூக அமைப்புகள் சார்பில் போராட்டங்ள் நடத்தப்பட்டு வருகின்றன.

புதுவை மாநிலம் தவளக்குப்பம் ராஜீவ்காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ–மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி முன்பு திரண்ட அவர்கள் பொள்ளாச்சி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும் இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

இந்தநிலையில் கல்லூரியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு புதுவை–கடலூர் சாலைக்கு வந்தனர். அங்கிருந்து அவர்கள் தானம்பாளையத்திற்கு ஊர்வலமாக சென்று உறவினர்கள் திடீரென்று மறியலில் ஈடுபட திட்டமிட்டனர். இதுபற்றி அறிந்தவுடன் தவளக்குப்பம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நியூட்டன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து மாணவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து போலீசார் கல்லூரி மாணவர்களிடம் தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தினர். அதை ஏற்று கல்லூரி மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story