காங்கிரசில் இருந்து ஏ.மஞ்சு விலகல்; பா.ஜனதாவில் சேர்ந்தார்


காங்கிரசில் இருந்து ஏ.மஞ்சு விலகல்; பா.ஜனதாவில் சேர்ந்தார்
x
தினத்தந்தி 18 March 2019 11:37 PM GMT (Updated: 18 March 2019 11:37 PM GMT)

முன்னாள் மந்திரி ஏ.மஞ்சு காங்கிரசில் இருந்து விலகி நேற்று முன்தினம் பா.ஜனதாவில் இணைந்தார். அவர் ஹாசன் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடுகிறார்.

ஹாசன், 

ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.மஞ்சு. இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார். இவர் சித்தராமையா முதல்- மந்திரியாக இருந்தபோது கால்நடை துறை மந்திரியாக பதவி வகித்தார். கடந்த ஆண்டு (2018) நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அரக்கல்கோடு தொகுதியில் போட்டியிட்ட அவர் ஜனதாதளம் (எஸ்) வேட்பாளர் டி.ராமசாமியிடம் தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஹாசனில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என ஏ.மஞ்சு எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் இந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சி கூட்டணி அமைத்து எதிர்கொள்கிறது. இதனால் கூட்டணி கட்சியான ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் தேவேகவுடாவின் பேரனும், மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் போட்டியிடுகிறார்.

இதனால் அதிருப்தி அடைந்த ஏ.மஞ்சு காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜனதாவில் சேர அவர் திட்டமிட்டு இருந்தார். இதுபற்றி கடந்த 16-ந்தேதி மஞ்சு ஹாசன் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. பிரீத்தம்கவுடாவை சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் ஹாசன் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிற்கும் சென்று மக்களை சந்தித்து மக்களின் விருப்பங்களை கேட்டு வந்தார். இந்த நிலையில் ஏ.மஞ்சு நேற்று முன்தினம் மாலை காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதையடுத்து அவர் ேக.ஆர்.புரத்தில் உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

அங்கு அவரை ஹாசன் எம்.எல்.ஏ. பிரீத்தம் கவுடா உள்பட பா.ஜனதா நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். இதையடுத்து இரவு 8.50 மணியளவில் கட்சி அலுவலகத்திற்குள் சென்ற ஏ.மஞ்சு பா.ஜனதா உறுப்பினர் விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு, உறுப்பினராக சேர்ந்து கொண்டார்.

பின்னர் ஏ.மஞ்சு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் பா.ஜனதாவின் பலத்தை அதிகப்படுத்தவே இணைந்துள்ளேன். அனைத்து தொண்டர்களும் வேறுபாடின்றி ஒன்றாக செயல்பட வேண்டும். நான் திரும்பவும் எனது வீட்டுக்கே வந்துள்ளேன். முழுமனதுடன் பா.ஜனதாவில் இணைய முடிவு எடுத்து தான் இணைந்துள்ளேன். எனது ஆதரவாளர்கள் அனைவரும் பா.ஜனதாவில் இணைய விருப்பம் தெரிவித்தனர். நான் கட்சியின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைப்பேன். மோடிக்கு நான் முதுகெலும்பாக இருப்பேன்.

குடும்ப அரசியலை தாங்களும் வெறுப்பதாக சிலர் கூறி வருகின்றனர். ஆனால் கட்சியில் பெரும்பாலானோர் அவர்களது மகன், பேரன்களுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கின்றனர். கட்சியின் 2-ம் கட்ட தலைவர்களுக்கு எந்த வாய்ப்பும் கொடுப்பதாக தெரியவில்லை. (அதாவது மறைமுகமாக தேவேகவுடா குடும்பத்தினரை அவர் சாடினார்.)

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து பிரீத்தம் கவுடா எம்.எல்.ஏ பேசுகையில், ஏ.மஞ்சு கட்சியில் நலனுக்காக வேலை செய்ய வேண்டும் என்று கருதி பா.ஜனதாவில் சாதாரண உறுப்பினராக இணைந்துள்ளார். ஹாசன் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட கட்சி மேலிடம் யாருக்கு வாய்ப்பு கொடுக்கிறதோ அவருக்கு ஆதரவாக நாம் அனைவரும் சேர்ந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வின் போது, பா.ஜனதா மாவட்ட தலைவர் யோகா ரமேஷ் கலந்துகொள்ளவில்லை. ஏனெனில் அவர் பா.ஜனதா சார்பில் ஹாசன் தொகுதியில் போட்டியிட டிக்கெட் கேட்டு வந்தார். ஆனால் தற்போது ஏ.மஞ்சு பா.ஜனதாவில் இணைந்துள்ளார்.

இதனால் ஏ.மஞ்சு ஹாசன் தொகுதி வேட்பாளராக போட்டியிட இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் யோகா ரமேஷ் அதிருப்தியில் இருப்பதாகவும், அதன் காரணமாக தான் அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது.


Next Story