கடலில் குளித்த பிளஸ்-2 மாணவர்கள் 4 பேர் பலி, தேர்வு முடிந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்
பிளஸ்-2 தேர்வு முடிந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் கடலூர் தேவனாம்பட்டினத்தில் கடலில் குளித்த பிளஸ்-2 மாணவர்கள் 4 பேர் பலியானார்கள்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பெத்தாங்குப்பம் வள்ளலார் நகரை சேர்ந்த தேவராஜ் மகன் அபினேஷ் (வயது 17). இவர் கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் நேற்று நடைபெற்ற பிளஸ்-2 கடைசி தேர்வை எழுதினார்.
அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவர்களான திருப்பாதிரிப்புலியூர் வெள்ளிமோட்டான் தெரு பிரபாகரன் மகன் ஸ்ரீஹரி (17), முது நகர் ஆனந்த் மகன் தனுஷ்வர் (17), புவனகிரி கந்தப்பன் மகன் விக்னேஷ் (17), திருப்பாதிரிப்புலியூர் சேகர் மகன் பரணி குமார் (17) ஆகியோரும் தேர்வு எழுதினர்.
தேர்வு மதியம் 12.45 மணிக்கு முடிவடைந்து. இதனால் மாணவர்கள் ஒன்று சேர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பள்ளி வளாகத்தில் ஆரவாரமாக சத்தமிட்டனர். பின்னர் அனைவரும் மதியம் ஒன்று சேர்ந்து சாப்பிட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் கடலில் குளிப்பதற்கு முடிவு செய்தனர்.
அதன்படி அவர்கள் ஒன்று சேர்ந்து சில்வர் பீச்சுக்கு சென்றனர். அங்கு அவர்கள் நீண்ட நேரம் கடற்கரை மணலில் விளையாடியும், குளித்தும் மகிழ்ந்தனர். அப்போது மாலை 4 மணி அளவில் கடலில் சீறி வந்த ராட்சத அலையில் சிக்கி எதிர்பாராதவிதமாக 5 பேரும் கடலில் மூழ்கினர். அதில் அபினேஷ் கடலில் தத்தளித்தபடி காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டார்.
சத்தம் கேட்டதும் அருகில் நின்ற இளைஞர்கள், மீனவர்கள் ஓடிச்சென்று அவர் களை மீட்டனர். இதில் அபினேஷ் மட்டும் மயங்கிய நிலையில் கிடந்தார். ஸ்ரீஹரி, தனுஷ்வர், விக்னேஷ் ஆகிய 3 பேரும் அசைவின்றி கிடந்தனர். ஆனால் பரணிகுமாரை நீண்ட நேரம் கடலில் தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையே மீட்கப்பட்ட 4 பேரையும் அக்கம், பக்கத்தினர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு ஸ்ரீஹரி, தனுஷ்வர், விக்னேஷ் ஆகிய 3 பேரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதற்கிடையே கடலில் மூழ்கி மாயமான பரணி குமாரை இரவு 7 மணி வரை கடலூர் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர், தீயணைப்பு வீரர்கள், மீனவர்கள் தேடினர். அப்போது பரணிகுமார் உடல் கடற்கரையோரம் சிறிது தொலைவில் கரை ஒதுங்கியது. இதனால் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
இது குறித்து தேவனாம் பட்டினம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story