திண்டிவனம் பகுதியில், அரசு ஊழியர் உள்பட 2 பேரிடம் ரூ.7 லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி


திண்டிவனம் பகுதியில், அரசு ஊழியர் உள்பட 2 பேரிடம் ரூ.7 லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி
x
தினத்தந்தி 19 March 2019 11:00 PM GMT (Updated: 19 March 2019 10:25 PM GMT)

திண்டிவனம் பகுதியில் அரசு ஊழியர் உள்பட 2 பேரிடம் ரூ.7 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திண்டிவனம், 

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதையொட்டி பணம் மற்றும் பரிசு பொருட்கள் கடத்தப் படுவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் திண்டிவனம் அருகே பெரும்பாக்கம் கிராமத்தில் புதுச்சேரி-மயிலம் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கனகராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை மறித்து சோதனை செய்தனர். அப்போது அவர் எடுத்து வந்திருந்த பையை சோதனை செய்த போது அதில் ரூ. 6 லட்சம் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பரங்கினி கிராமத்தை சேர்ந்த விஜய குமார் (வயது 35) என்பதும், கனிம வளத்துறையில் அரசு ஊழியராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

வீட்டுமனை வாங்குவதற்காக பணத்தை விழுப்புரத்திற்கு எடுத்து சென்றதாக விஜயகுமார் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். பணத்திற்கான ஆணங்களை அதிகாரிகள் கேட்ட போது அவரிடம் எதுவும் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் திண்டிவனம் தாசில்தார் ரகோத்தமனிடம் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து அந்த பணம் திண்டிவனம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல் மரக்காணம் அருகே ஆலத்தூர் கூட்டு சாலையில் நேற்று மாலை தேர்தல் பறக்கும் படை அலுவலர் பிரபுசங்கர் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்ததில் காரில் வந்த மரக்காணம் தாலுகா நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த புகழேந்தி ( 34) என்பவரிடம் ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், தான் தர்பூசணி வியாபாரம் செய்வதற்காக திண்டிவனம் சென்று மொத்த வியாபாரியிடம் தர்பூசணி பழங்களை வாங்கி வருவதற்காக பணத்தை கொண்டு செல்வதாக தெரிவித்தார். இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மூலம் நேற்று ஒரே நாளில் திண்டிவனம் பகுதியில் ரூ.7 லட்சத்து 16 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

Next Story