கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதை காளான் விற்றால் குண்டர் சட்டத்தில் கைது - கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. உத்தரவு


கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதை காளான் விற்றால் குண்டர் சட்டத்தில் கைது - கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. உத்தரவு
x
தினத்தந்தி 19 March 2019 11:00 PM GMT (Updated: 19 March 2019 10:25 PM GMT)

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதை காளான் விற்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஆபாஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதேபோல் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதை காளான் விற்பனை செய்யப்படுவதாக அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

அதிலும் குறிப்பாக கொடைக்கானல் ஏரி, வட்டக் கானல், பூம்பாறை, மன்னவனூர், கவுஞ்சி, கிழாவரை, பெரும்பள்ளம், வில்பட்டி, பேத்துப்பாறை, தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் போதை காளான் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து போதைபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடைக்கானலுக்கு வந்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு ஆனிவிஜயா தலைமையில் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என சுமார் 65 பேர் கொடைக்கானலில் 5 நாட்கள் சோதனை நடத்தினர். அப்போது போதை காளான் வளர்க்கப்படுகிறதா?, ஓட்டல்கள் மற்றும் விடுதிகளில் விற்பனை செய்யப்படுகிறதா? என்று சோதனை செய்தனர்.

இதற்கிடையே போதை காளான் விற்பனையை தடுக்கும் வகையில் கொடைக் கானலில் போலீசார் தீவிர சோதனை நடத்த வேண்டும். அதேபோல் ஆங்காங்கே உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் கண்காணிக்க வேண்டும். அதில் யாரேனும் போதை காளான் விற்பனை செய்வது தெரியவந்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று, போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஆபாஷ்குமார் ஒரு உத்தரவிட்டுள்ளார்.


Next Story