தேர்வுப்பணியில் கவனக்குறைவாக செயல்பட்ட 22 ஆசிரியர்கள் வெவ்வேறு மையத்திற்கு இடமாற்றம் - பள்ளிக்கல்வி இணை இயக்குனர் உத்தரவு
தேர்வுப்பணியில் கவனக்குறைவாக செயல்பட்ட 22 ஆசிரியர்களை வெவ்வேறு மையத்திற்கு இடமாற்றம் செய்து பள்ளிக்கல்வி இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்,
தமிழகம் முழுவதும் கடந்த 14-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தமிழ் 2-ம் தாள் தேர்வு நடந்தது. விழுப்புரம் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட கோலியனூர், சிறுவந்தாடு, விக்கிரவாண்டி, வளவனூர் உள்ளிட்ட தேர்வு மையங்களில் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் அருள்முருகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தேர்வுப்பணியில் ஈடுபட்ட முதன்மை அறை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் முறையாக தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடாமலும், கவனக்குறைவாகவும் செயல்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக கோலியனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் பணியில் இருந்த ஆசிரியர்களான ரவிச்சந்திரன் சிறுவந்தாடு அரசு பள்ளி தேர்வு மையத்திற்கும், அங்கிருந்த மரியஜோசப் கோலியனூருக்கும், விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்த ஜெபமணி அலெக்சாண்டர் செல்லதாஸ் விழுப்புரம் மகாத்மாகாந்தி உயர்நிலைப்பள்ளிக்கும், அங்கிருந்த கேசவன் விக்கிரவாண்டிக்கும், கோலியனூர் மையத்தில் இருந்த சரவணன் கெடாருக்கும், அங்கிருந்த ரமணி விழுப்புரம் எம்.ஆர்.ஐ.சி. ஆர்.சி. பள்ளிக்கும், விஜய் வளவனூர் அரசு ஆண்கள் பள்ளி மையத்திற்கும், அங்கிருந்த வினோத்குமார் மற்றும் கெடார் அரசு பள்ளி தேர்வு மையத்தில் இருந்த பாலாஜி, விழுப்புரம் எம்.ஆர்.ஐ.சி. ஆர்.சி. நிதி உதவி பள்ளி தேர்வு மையத்தில் இருந்த விஜயபிரபா ஆகியோர் கோலியனூர் அரசு பள்ளி தேர்வு மையத்திற்கும், அங்கிருந்த ஜெரினா, சத்தியபாமா, சிலம்புசெல்வி, சுபாஷ், கீதாலட்சுமி, கவிதா ஆகியோர் விழுப்புரம் தூய இருதய மேல்நிலைப்பள்ளிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதேபோல் தூய இருதய மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் இருந்த அபிபுன்னிசா, மெட்டில்டா, தெய்வானைசிவா, குமரன், குப்புசாமி, ஜெயசங்கர் ஆகியோர் கோலியனூர் அரசு பள்ளி தேர்வு மையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வி இணை இயக்குனர் அருள்முருகன் பிறப்பித்தார்.
Related Tags :
Next Story