ஊட்டி சேரிங்கிராசில், குழாய் உடைந்து குடிநீர் வீணானது - போக்குவரத்து பாதிப்பு


ஊட்டி சேரிங்கிராசில், குழாய் உடைந்து குடிநீர் வீணானது - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 21 March 2019 4:15 AM IST (Updated: 20 March 2019 11:45 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி சேரிங்கிராசில் குழாய் உடைந்து குடிநீர் வீணானது. மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஊட்டி,

ஊட்டியில் சேரிங்கிராஸ் சந்திப்பு முக்கிய பகுதியாக உள்ளது. குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் ஊட்டியில் சேரிங்கிராசை கடந்து தான் மற்ற இடங்களுக்கு செல்கின்றன. இதனால் பகலில் எப்போதும் வாகன நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும்.

அப்பகுதியில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டு, போலீசார் போக்குவரத்தை சரிசெய்து வருகின்றனர். பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து பெரிய குழாய்கள் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமுக்கு குடிநீர் செல்கிறது. இந்த குழாய்கள் சேரிங்கிராஸ் வழியாக ஊட்டி-குன்னூர் சாலையோரத்தில் பதிக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சேரிங்கிராஸ் சந்திப்பில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாக வெளியேறி கொண்டே இருந்தது.

அதனை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, உடைப்பை சரிசெய்யும் பணி நடைபெற்றது. பின்னர் குடிநீர் வெளியேறுவது நின்றது. அதன் காரணமாக அப்பகுதியில் குழி ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று குழாயில் இருந்து மீண்டும் குடிநீர் வெளியேறியது. சேரிங்கிராஸ் சந்திப்பில் குடிநீர் வெளியேறி கொண்டே இருப்பதாலும், மண் தோண்டப்பட்டதாலும் சேறும், சகதியுமாக மாறி உள்ளது. மேலும் அதனை சுற்றி தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் பகல் நேரங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் உள்பட பலர் சேரிங்கிராஸ் பகுதியை கடந்து சென்று வருகின்றனர். கிராமப்புறங்களுக்கு செல்லும் மக்கள் அரசு பஸ்சுக்காக அப்பகுதியில் காத்திருப்பார்கள். கடந்த சில நாட்களாக குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி கொண்டே இருக்கிறது. கோடை காலம் நெருங்கி வந்து கொண்டு இருக்கும் நிலையில், குடிநீர் வீணாவது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

அப்பகுதி சேறும், சகதியுமாக மாறி உள்ளதால் வாகன ஓட்டிகள் இடதுபுறமாக செல்லும் போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டு இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே குடிநீர் குழாயை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story